தி.மு.க. கூறிய தொகுதி எண்ணிக்கை பற்றி நாளை செயற்குழுவில் ஆலோசித்து முடிவு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு


தி.மு.க. கூறிய தொகுதி எண்ணிக்கை பற்றி நாளை செயற்குழுவில் ஆலோசித்து முடிவு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
x
தினத்தந்தி 4 March 2019 1:05 PM IST (Updated: 4 March 2019 1:05 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூறிய தொகுதி எண்ணிக்கை பற்றி நாளை செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி ஏற்பட்டு உள்ளது. தே.மு.தி.க.வையும், த.மா.கா.வையும் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க. முயற்சி எடுத்து வருகிறது. 

அதேசமயம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இதில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று  திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

2ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  இதற்கான ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.

இதேபோன்று தொகுதி பங்கீடு பற்றி தி.மு.க.வுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 2வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.  இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறும்பொழுது, தி.மு.க. கூறிய தொகுதி எண்ணிக்கை பற்றி நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.

Next Story