சாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பரிசோதனை மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் விளக்கம்


சாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பரிசோதனை மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் விளக்கம்
x
தினத்தந்தி 5 March 2019 3:11 AM IST (Updated: 5 March 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

பரிசோதிக்கப்படாத ரத்தம் செலுத்தியதால் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளான சாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு முதல் முறையாக நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. பரிசோதனை நடந்தது. இது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் விளக்கம் அளித்தார்.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு, அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகாசி அரசு ரத்த வங்கியில் இருந்து வாங்கி வந்த ரத்தத்தை பரிசோதிக்காமல் ஏற்றியதால் அந்த பெண் இந்த பாதிப்புக்கு ஆளாகியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியின் மகப்பேறு பிரிவில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை சுமார் 1 கிலோ 700 கிராம் எடையுடன் பிறந்தது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அதன் மூலம் எச்.ஐ.வி. தொற்று பரவும் என்பதால், பால் பவுடர் போன்ற உணவுகள் மட்டும் குழந்தைக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. குழந்தை பிறந்து 45 நாட்கள் தீவிர கண்காணிப்பிற்கு பிறகுதான் அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியும் என டாக்டர்கள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் 45 நாள் நிறைவு பெற்றதை தொடர்ந்து அந்த குழந்தையின் ரத்த மாதிரியை எடுத்தனர். பின்னர் அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருக்கிறதா என்பது குறித்து ஆராய்வதற்காக பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரி டீன் வனிதா நிருபர்களிடம் கூறியதாவது:-

சாத்தூர் பெண்ணுக்கு பிரசவம் நடந்ததும், அவரது குழந்தை சுமார் 1 கிலோ 700 கிராம் எடையுடன் இருந்தது. ஆனால் தற்போது அந்த குழந்தையின் எடை 2 கிலோ 800 கிராம் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. குழந்தையும், தாயும் நலமாக இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 10 டாக்டர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் இருந்ததை விட குழந்தையின் உடல் வளர்ச்சி சீராகவும், நலமாகவும் இருக்கிறது. அதுபோல், குழந்தைக்கு தேவையான தடுப்பு மருந்துகளும் முறையாக கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது சேகரிக்கப்பட்டுள்ள குழந்தையின் ரத்த மாதிரிகள் வெளி மாவட்டத்தில் உள்ள ரத்த பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 30 நாட்களுக்கு பிறகுதான், பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கும். அதன் பின்னரே குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதியாக கூறமுடியும். இதுபோல், 6-வது மாதம், 12-வது மாதம், 18-வது மாதம் என மூன்று முறை ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இப்போதைக்கு இருவரையும் ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்ப முடியாது. தொடர் சிகிச்சைகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இருவரும், நீண்ட நாட்களுக்கு மதுரை ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சையில் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story