தூத்துக்குடி : கனிமொழிக்கு எதிராக களம் இறங்கும் தமிழிசை சவுந்தரராஜன் ?
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட போகும் கனிமொழிக்கு எதிராக தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
வரும் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கனிமொழி விருப்பம் மனு அளித்துள்ள நிலையில், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் அதே தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் நேற்று சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார். இதையடுத்து கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கட்சி தலைமை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன். தூத்துக்குடி தொகுதியை கேட்டு வருகிறோம். அதேபோல் பாஜக பலமாக இருக்கும் 5 தொகுதிகளை நாங்கள் கேட்டு இருக்கிறோம்.
இது தொடர்பாக அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம். பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் தேமுதிகவும் பங்கேற்கும் என நம்புவதாகவும், சென்னையில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
Related Tags :
Next Story