“மோடி எங்கள் டாடி” அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சொல்கிறார்


“மோடி எங்கள் டாடி” அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சொல்கிறார்
x
தினத்தந்தி 8 March 2019 11:00 PM GMT (Updated: 8 March 2019 7:53 PM GMT)

“மோடிதான் எங்கள் டாடி” என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

“மோடிதான் எங்கள் டாடி” என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

பேட்டி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகராஜபுரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது. இதில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த நாற்பது நாட்களில் 4 முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். ஒகி, கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட போது, மக்களுக்கு தமிழக அரசே அனைத்து உதவிகளையும் செய்துவிட்டது. எனவே பிரதமர் வரவேண்டிய அவசியம் இல்லை.

“மோடிதான் டாடி”

ரபேல் போர் விமான குற்றச்சாட்டு யூகங்கள் அடிப்படையில் கூறப்படுகிறது. அதற்கு ஆவணங்கள் ஏதும் இல்லை. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் வைக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைக்க மு.க.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். கருணாநிதி மரியாதைக்குரிய தலைவர். இதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

தமிழக மக்கள் அ.தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளனர். இங்கு மதவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் இடம் கிடையாது. மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் தொடர வேண்டும். ஜெயலலிதா என்ற ஆளுமை இப்போது இல்லாத நிலை இருப்பதால், “மோடிதான் இப்போது எங்கள் டாடி”. அவர் “இந்தியாவின் டாடி”.

எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story