நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு; கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு; இன்றே நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது


நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு; கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு; இன்றே நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 10 March 2019 5:30 PM IST (Updated: 10 March 2019 6:30 PM IST)
t-max-icont-min-icon

2019 நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் இன்றே அமலுக்கு வந்தது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


543 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் வரும் ஜூன் மாதம் 3-ந் தேதி முடிகிறது. அதற்குள் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்தி, முடிவுகள் அறிவித்து 17-வது நாடாளுமன்ற மக்களவை அமைக்கப்பட வேண்டும். எனவே தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் முடுக்கிவிட்டது.  இந்த நிலையில் 17-வது மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.  தலைநகர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் அசோக் லாவசா, சுஷில் சந்திரா ஆகியோருடன் நிருபர்களை சந்தித்து பேசிவருகிறார்கள்.  

17-வது மக்களவை தேர்தலுக்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பள்ளி தேர்வுகள், திருவிழாக்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டுள்ளோம். 23 மாநிலங்களில் 100 சதவித வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டியது அவசியம், அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம்.

வேட்பாளர் மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் வரையில் வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடைபெறும். பல்வேறு துறைகளுடன் பேசி தேர்தலை சுமூகமாக நடத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என சுனில் அரோரா கூறினார். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கும் வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம் இருக்கும். இலவச டோல்பிரீ எண் 1950 மூலம் புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை சரிபார்க்கலாம்.  புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடி சீட்டு தேர்தலுக்கு 5 நாள் முன்பே வழங்கப்படும். ஆனால் உரிய அடையாள அட்டை கொண்டே வாக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  

வேட்பாளர்கள் படிவம் 26 தாக்கல் செய்யவில்லை என்றால் வேட்புமனு நிராகரிக்கப்படும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கிகள் வைக்கக்கூடாது. தேர்தலை அமைதியாக நடத்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட உள்ளனர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கையை எடுப்பார்கள். 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட உள்ளது.  தேர்தல் அறிவிப்பு வெளியாகிய இன்றே நடத்தை விதிகளும் அமலுக்கு வருகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story