எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது : 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 12,546 பள்ளிகளச் சேர்ந்த 9 லட்சத்து 59,618 மாணவ, மாணவிகளும் 38,176 தனித்தேர்வர்களும் எழுதவுள்ளனர்.
சென்னை,
2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 29-ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும். மற்ற பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணி வரை நடக்கும்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 38 ஆயிரத்து 176 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 133 தேர்வு மையங்கள் அதிகம் ஆகும்.
சென்னை மாநகரில் 567 பள்ளிகளில் இருந்து 213 தேர்வு மையங்களில் 50 ஆயிரத்து 678 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருக்கின்றனர். வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 152 சிறைவாசிகள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வுக்காக 49 ஆயிரம் ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். தேர்வு பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங் களை பார்வையிடுவதற்கு சுமார் 5 ஆயிரத்து 500 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மைய வளாகத்தில் மாணவ-மாணவிகள் செல்போன் எடுத்து வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு அறையில் தங்களுடன் செல்போனை வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவ-மாணவிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.
தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகளை தெரிவிக்க 9385494105, 9385494115, 9385494120, 9385494125 ஆகிய எண்களில் நாளை முதல் 29-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story