எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 15 March 2019 2:21 AM IST (Updated: 15 March 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 38 ஆயிரத்து 176 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் எழுதினர்.

இந்த தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

சென்னையில் மட்டும் 213 மையங்களில் 50 ஆயிரத்து 678 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்வு அறை கண்காணிப்பாளராக சுமார் 49 ஆயிரம் ஆசிரியர் கள் பணியில் ஈடுபட்டனர்.

தமிழ் முதல் தாள்

இதுவரை எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் மற்றும் ஆங்கிலம் பொதுத்தேர்வுகள் காலையில் தான் நடைபெற்று வந்தன. ஆனால் இந்த ஆண்டு 2 மொழி பாடத்தேர்வுகளும் பிற்பகலில் நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி, நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை ஆய்வு செய்வதற்காக 5,500 பறக்கும் படை உறுப்பினர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் ஆகிய சிறைகளில் உள்ள 152 சிறைவாசிகள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள்.

எளிமையாக இருந்தது

நேற்று நடந்த தமிழ் முதல் தாள் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் வினாக்களில் சில வினாக்கள் பாடப்பிரிவுகளின் உள்ளே இருந்து கேட்டு இருந்ததாகவும், வினா எண் 45, 46 மட்டும் சற்று கடினமாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர். தமிழ் இரண்டாம் தாள் தேர்வு வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

பிற்பகலில் நடத்தப்படும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் கூறுகையில், ‘பிற்பகலில் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு உற்சாகமாக இருக்காது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வுக்கு வருவதற்குள் மாணவர்கள் சோர்வடைந்துவிடுவார்கள். எனவே, ஏற்கனவே இருந்த நடைமுறையை பின்பற்றி காலையிலேயே தேர்வு நடத்த வேண்டும்’ என்று கூறினர். இதே கருத்தை தான் பெற்றோரும் தெரிவித்தனர்.

Next Story