குற்றவாளி சம்பவ தினத்தில் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்தாரா என கேள்வி கேட்டனர்; மயூரா ஜெயக்குமார் பேட்டி


குற்றவாளி சம்பவ தினத்தில் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்தாரா என கேள்வி கேட்டனர்; மயூரா ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 21 March 2019 12:05 PM GMT (Updated: 21 March 2019 12:05 PM GMT)

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளி சம்பவ தினத்தில் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்தாரா? என்பது பற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தினர் என மயூரா ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக்  மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர்.

இதில் சபரிராஜன் (வயது 25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28) மற்றும் வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் இதுபற்றி புகார் கொடுத்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்தில் (33), பாபு (26), ஆச்சிபட்டி வசந்தகுமார் (26), ஜோதி நகர் பார் நாகராஜ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் நாகராஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி நாகராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராகவும் உள்ள மயூரா ஜெயக்குமாருக்கு இன்று சம்மன் அனுப்பினர்.

பொள்ளாச்சி திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது என தகவல் வெளியானது.

இந்த நிலையில், அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளி சம்பவ தினத்தில் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்தாரா? என்பது பற்றி அறிந்து கொள்வதற்காக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தவிர வேறு எந்த கேள்விகளையும் அவர்கள் கேட்கவில்லை.  எனது எழுத்துப்பூர்வ பதிலை நான் அளித்துள்ளேன்.  அதிகாரிகளுக்கு தேவையான எந்த தகவலையும் அளிக்க எப்பொழுதும் தயாராக உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

Next Story