2016 சட்டமன்ற தேர்தல் செலவு : திமுக-ரூ.205 கோடி அதிமுக-ரூ.217 கோடி
2016 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக ரூ.205 கோடியும் அதிமுக ரூ.217 கோடியும் செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்தில் கணக்கு காட்டியுள்ளன.
புதுடெல்லி
தமிழகம், புதுச்சேரி 2016 சட்டமன்ற தேர்தல் வரவு செலவு விவரத்தினை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனும், அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவும் தேர்தல் ஆணையத்துக்கு தாக்கல் செய்துள்ளனர்.
2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிவிப்பின்போது திமுகவின் வங்கி இருப்பு 205 கோடி ரூபாயாகவும், அதிமுகவின் கையிருப்பு மற்றும் வங்கி இருப்பு 217 கோடி ரூபாயாகவும் இருந்தது. தேர்தல் அறிவிப்புக்கு பின்னர், டெபாசிட் மூலமான வட்டியாக திமுகவுக்கு 9 கோடியே 69 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது.
அதிமுக தாக்கல் செய்துள்ள கணக்கில் மாவட்டங்கள் மூலம் வரவாக 4 கோடியே 10 லட்ச ரூபாய் காட்டப்பட்டுள்ளது. செலவுகளைப் பொறுத்தவரை, திமுக தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்களின் போக்குவரத்துக்கு 1 கோடியே 16 லட்ச ரூபாயும், அதிமுக நட்சத்திர பேச்சாளர்களின் போக்குவரத்துக்கு 20 லட்ச ரூபாயும், தலைவர்களின் போக்குவரத்துக்கு 9 கோடியே 42 லட்ச ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளன.
அச்சு, தொலைக்காட்சி, டிஜிட்டல் விளம்பரங்களுக்கு திமுக 33 கோடியே 46 லட்ச ரூபாயும், அதிமுக 49 கோடியே 71 லட்ச ரூபாயும் செலவு செய்துள்ளன.
பிரசார போஸ்டர், பேனர், பனியன் போன்றவற்றுக்கு திமுக 8 கோடியே 56 லட்ச ரூபாயும், அதிமுக 4 கோடியே 14 லட்ச ரூபாயும் செலவிட்டுள்ளன.
பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்கு திமுக 8 கோடியே 88 லட்ச ரூபாயும், அதிமுக 1 கோடியே 18 லட்ச ரூபாயும் செலவு செய்துள்ளது. இதர செலவுகளாக திமுக சார்பில் 29 லட்ச ரூபாயும், அதிமுக சார்பில் 4 லட்ச ரூபாயும் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி தேர்தல்களின் மொத்த செலவு என்று திமுக ஒட்டுமொத்தமாக 53 கோடியே 37 லட்ச ரூபாய்க்கு கணக்கு காட்டியுள்ளது.
அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரி, கேரளா மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 64 கோடியே 72 லட்ச ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
திமுக சார்பில் தொப்பி வாங்குவதற்கு 4 கோடியே 62 லட்ச ரூபாயும், மாஸ்க் வாங்க 1 கோடியே 86 லட்ச ரூபாயும், பேட்ஜ் வாங்க 1 கோடியே 13 லட்ச ரூபாயும், மப்ளர் வாங்க 63 லட்ச ரூபாயும், துண்டு வாங்குவதற்கு 24 லட்ச ரூபாயும், ஸ்டிக்கர் வாங்குவதற்கு 4 லட்ச ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தேர்தல் பிரசார செலவுகளில் விளம்பரங்களுக்கு அடுத்து அதிக செலவிடப்பட்டது ஜெயலலிதாவின் பயணங்களுக்குத்தான். விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் 14 நாட்கள் பயணம் செய்துள்ளார். அதற்காக 9 கோடியே 42 லட்ச ரூபாய் அந்த கட்சி செலவு செய்துள்ளது.
Related Tags :
Next Story