தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது- தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவசா தெரிவித்து உள்ளார்.
சென்னை
தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா, தேர்தல் ஆணைய நிர்வாக இயக்குனர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.
தேர்தல் அதிகாரி இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கும் (பகுஜன் சமாஜ், பா.ஜ.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், அ.தி.மு.க, தி.மு.க., தே.மு.தி.க. என மொத்தம் 10 கட்சிகள்) இதில் பங்குபெற்றன.
ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லவசா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை சந்தித்தோம்; காவல், வருமான வரி மற்றும் தேர்தல் அதிகாரிகளை சந்தித்தோம். பணப்பட்டுவாடா விவகாரத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
பணப்பட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் பறக்கும்படையினர் சாதாரண மக்கள், வியாபாரிகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது, தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அதிகாரிகள் அலட்சியம், தவறான உள்நோக்கத்துடன் செயல்படுவதை தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது எனக் குறிப்பிட்ட அசோக் லவசா, தேர்தல் பறக்கும்படையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது; காவல், துணை ராணுவம் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்,
ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் குறைந்தது 2 செலவின பார்வையாளர்கள் உள்ளனர் என்றும், தமிழகத்திற்கு சிறப்பு செலவின தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பூத் சிலிப் மூலம் வாக்களிக்க முடியாது; புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை 2 நாளில் வழங்கப்படும். மத்திய பாதுகாப்பு படையினர் தேவையான இடங்களில், தேவையான அளவுக்கு நிறுத்தப்படுவர் என்றும், சி-விஜில் ஆப் மூலம் அனைவரும் புகைப்படம், வீடியோக்கள் ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் .
பெண்கள் மட்டும் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் மக்களவை தொகுதிக்கு தலா ஒன்று அமைக்கப்படும்
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அசோக் லவசா கூறினார்.
Related Tags :
Next Story