வன்னியர் அறக்கட்டளை விவகாரம்:‘மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு’ டாக்டர் ராமதாஸ் பேச்சு


வன்னியர் அறக்கட்டளை விவகாரம்:‘மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு’ டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 8 April 2019 5:00 AM IST (Updated: 8 April 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர் அறக்கட்டளை குறித்து பேசிய மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

வேலூர்,

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து வேலூர் சேண்பாக்கத்தில் நேற்று மாலை தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி போன்று தமிழகத்தில் இதுவரை எந்த கூட்டணியும் அமைந்தது கிடையாது. நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய எங்கள் கட்சியை சேர்ந்த ஆர்.வேலு 5 ஆண்டுகளாக மத்திய மந்திரியாக இருந்தார். அவர் திண்டிவனம்-நகரி இடையே 180 கிலோமீட்டர் தூரம் புதிய ரெயில் பாதையை கொண்டுவந்தார். அரக்கோணம் உள்பட பல ரெயில்வே மேம்பாலங்களை அமைத்தார்.

அன்புமணி ராமதாஸ் சுகாதார மந்திரியாக இருந்தபோதுதான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை சிகிச்சை வசதியை கொண்டு வந்தார். வாலாஜாவில் விபத்து அவசர சிகிச்சை மையத்தை கொண்டு வந்தார். ஆனால் நீங்கள் வாக்களித்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் இந்த பக்கம் வந்ததில்லை.

2009-ல் இலங்கையில் 1½ லட்சம் தமிழர்களை சுட்டுக்கொன்றனர். 3 லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் உணவின்றி தவித்தார்கள். பிரபாகரனின் மனைவி, குழந்தையை கொன்றார்கள். அந்த நாட்டில் ஜெகத்ரட்சகன் ரூ.26 ஆயிரம் கோடியை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அந்த நிதியில் கொஞ்சமாவது ஒதுக்கி இந்த தொகுதியில் கல்வி நிறுவனமோ, தொழிற்சாலையோ அவர் தொடங்கினாரா?.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் கூட்டங்களில், வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை எனது மனைவி சரஸ்வதி பெயருக்கு மாற்றிவிட்டதாக பிரசாரம் செய்து வருகிறார். அதை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் தி.மு.க. தலைவர் பதவியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகவேண்டும்.

அந்த அறக்கட்டளையில் எனக்கும், எனது மனைவிக்கும் சம்பந்தமில்லை. இதுசம்பந்தமாக அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 6 நாட்களாகியும் இதுவரை பதில் இல்லை. குறைந்தபட்சம் அவர் மன்னிப்பாவது கேட்கவேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது வழக்கு தொடர இருக்கிறேன்.

தேர்தல் முடிந்ததும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். வேலூர் மாவட்டத்தை திருப்பத்தூர், வேலூர், அரக்கோணம் ஆகிய 3 மாவட்டங்களாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story