தேர்தல் நடத்தை விதிமீறல்; 4,185 வழக்குகள் பதிவு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்புடைய 4,185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு கட்சிகள் பிரசாரம், பொது கூட்டம் மற்றும் பேரணி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் பறக்கும் படை வாகன பரிசோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது.
இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இல்லாததால் 124 கோடியே 63 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்துள்ளனர்.
இவற்றில் நேற்று மட்டும் ரூ.2 கோடியே 33 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதேபோன்று 283 கோடி ரூபாய் மதிப்பிலான 989.6 கிலோ தங்கம் மற்றும் 492.3 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
வேலூர் வருமான வரிச்சோதனை தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை நான்காயிரத்து 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலை கண்காணிக்க ஏழாயிரத்து 280 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என அவர் கூறினார்.
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையிலான நாட்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும் திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் தொகுதிகளுக்கு மே 19ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story