முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தடை இல்லை; சென்னை உயர் நீதிமன்றம்


முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தடை இல்லை; சென்னை உயர் நீதிமன்றம்
x

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர், ஜி.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரி கடந்த 1998-ம் ஆண்டு ஜி.மங்கலம் சர்ஜாபுரம் சந்திப்பில் கோவிந்தரெட்டி என்பவர் தலைமையில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமரசம் ஏற்படவில்லை. இந்தநிலையில் போராட்டம் திடீரென கலவரமாக மாறியது. 

இந்த கலவரம் தொடர்பாக பாகலூர் போலீசார் கோவிந்தரெட்டி உள்பட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த போராட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வந்த பாலகிருஷ்ணரெட்டியும் கலந்து கொண்டதால் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஓசூர் கோர்ட்டில் நடந்தது. பின்னர், கிருஷ்ணகிரி மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணரெட்டி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்து வருவதால் இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147-ன் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 341-ன் கீழ் ஒரு மாதம் சிறை தண்டனையும், தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை பாலகிருஷ்ணரெட்டி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணரெட்டி பதவி இழந்தார்.  இதனால் காலியான தொகுதியாக ஓசூர் அறிவிக்கப்பட்டது.  அங்கு சட்டசபைக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளராக போட்டியிடுபவர் புகழேந்தி.

இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் ஓசூர் தொகுதி எம்.எம்.ஏ.வும், அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால், அவர் தன்னுடைய எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இதையடுத்து ஓசூர் தொகுதிக்கு வருகிற 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பாலகிருஷ்ண ரெட்டி தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

குற்ற வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. எனவே அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றனர். மனுதாரர் சார்பில் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி வாதிட்டார்.  இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலோ, தேர்தல் நடத்தை விதிகளிலோ ஒருவரை பிரசாரம் செய்ய தடை விதிக்க எந்த விதிகளும் இல்லை என வாதிடப்பட்டது.  இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.  அ.ம.மு.க. வேட்பாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.

Next Story