ஜே.கே. ரித்திஷ் மறைவு அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது: மு.க. ஸ்டாலின் இரங்கல்


ஜே.கே. ரித்திஷ் மறைவு அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது: மு.க. ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 13 April 2019 7:41 PM IST (Updated: 13 April 2019 7:41 PM IST)
t-max-icont-min-icon

ஜே.கே. ரித்திஷ் மறைவு அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் தி.மு.க. எம்.பி.யான ஜே.கே. ரித்தீஷ் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று மாரடைப்பினால் காலமானார்.  அவருக்கு வயது (வயது 46).

இலங்கை கண்டியில் பிறந்தவரான இவருக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.  இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

ராமநாதபுரத்தில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த கானல்நீர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து  மக்களிடையே அறிமுகம் ஆன பின் நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.  இவர் கடைசியாக எல்.கே.ஜி. என்ற படத்தில் நடித்துள்ளார்.

தி.மு.க.வில் இருந்த அவர் கடந்த 2014ம் ஆண்டு  அ.தி.மு.க.வில் இணைந்து அக்கட்சியின் முதன்மை உறுப்பினரானார்.   இந்நிலையில், உடல்நல குறைவால் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  ஆனால் திடீரென அவர் இன்று காலமானார்.  

இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது..

நடிகராகவும், அரசியல்வாதியாகவும் புகழ் பெற்ற ஜே.கே.ரித்தீஷ் மறைவு செய்தி திரை உலகினர் மத்தியிலும் அரசியல் கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின்,  இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 

ராமநாதபுரம் முன்னாள் எம்பியும், எனது நண்பருமான ஜே.கே. ரித்தீஷ் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடமும், கலைஞர் கருணாநிதியிடமும் அளப்பரிய அன்பு காட்டியவர். ஜே.கே. ரித்தீஷ் இளம் வயதில் மரணம் அடைந்த துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார். 

Next Story