எடப்பாடி பழனிசாமி ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசாரத்தில், மு.க.ஸ்டாலின் பேச்சு


எடப்பாடி பழனிசாமி ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசாரத்தில், மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 4:30 AM IST (Updated: 16 April 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

மத்தியசென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து, சென்னை ஐஸ்அவுஸ் சந்திப்பில் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் ‘உதயசூரியன்’ சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:-

மத்தியில் நடைபெறக்கூடிய ஆட்சி மதவெறி பிடித்த ஆட்சி. சர்வாதிகார ஆட்சி. நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் கவலைப்படாத ஆட்சி. ஆக மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் தான் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க காத்திருக்கிறீர்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ‘மெஜாரிட்டி’ இல்லாத ஒரு ‘மைனாரிட்டி’ ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மைனாரிட்டி ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து இதுவரை காத்து வருபவர், மோடி. ஆக மோடி ‘அவுட்’ ஆனால் எடப்பாடி பழனிசாமியும் ‘அவுட்’ ஆகிவிடுவார்.

18 சட்டசபை இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதியும், மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதியும் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல 22 சட்டசபை இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. தான் வெற்றிபெற போகிறது.

தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் சேர்ந்து 97 எம்.எல்.ஏ.க்கள் நம்மிடம் உள்ளனர். இப்போது புதிதாக கிடைக்க உள்ள 22 எம்.எல்.ஏ.க்களும் சேர்த்தால் நமது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 119 ஆகும். தமிழகத்தில் ஆட்சி அமைக்க 234-க்கு 117 எம்.எல்.ஏ.க்கள் போதும். நமக்கு 119 எம்.எல்.ஏ.க்கள் கிடைக்க போகிறார்கள். ஆக யாருக்கு ஆட்சி? என்பதை நீங்களே கூறுங்கள்.

மோடி ஆட்சியும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் முடிவுக்கு வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ஆக வாக்காளர்களாகிய நீங்கள் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க போகிறீர்கள். 2 ஆட்சிகளையும் தூக்கி எறிய ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ள திருவல்லிக்கேணி-சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க. முழுமையான வெற்றி பெற்றது. ஆக மத்திய சென்னை தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட மத்தியசென்னை தொகுதியில் தயாநிதி மாறன் களமிறங்கி உள்ளார். இவர் ஏற்கனவே 2 முறை இதே தொகுதியில் எம்.பி.யாக தேர்வு ஆகி, மத்திய மந்திரியாக நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை ஆற்றியிருக்கிறார். குறைந்த கட்டணத்தில் ‘இண்டர்நெட்’ சேவை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ரூ.1-க்கு பேசும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை ஏற்படுத்தி தந்திருக்கிறார்.

நான் சென்னையில் 2 முறை மேயராக இருந்திருக்கிறேன். மேயராக இருந்த சமயத்தில் செய்த பணிகளும் உங்களுக்கு தெரியும். மாநகராட்சியையே ஒழுங்குபடுத்தினோம்.

மோடி ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற குரல் இப்போது எல்லா மாநிலங்களிலும் ஒலிக்க தொடங்கி இருக்கிறது. ராகுல்காந்தி தான் பிரதமராக வேண்டும் என்று தி.மு.க. சார்பில் முதலில் நான் தான் குரல் கொடுத்தேன். தற்போது அந்த குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். ஆனால் இந்த 5 ஆண்டுகளில் யாருக்காவது வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறதா?. வரும்... ஆனால் வராது. இது தான் மோடியின் பாலிசி.

கள்ளநோட்டுகள் அல்ல. நல்லநோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இப்படி செய்ததாக சொன்னார்.

ஒரு திருடனை பிடிக்க வேண்டும் என்றால் நேரடியாக போய் பிடிக்க வேண்டும். ஆனால் ஒட்டுமொத்த பொதுமக்களையும் பிடித்து சிறையில் அடைத்துவிட்டு, அதில் இருந்து திருடனை கண்டுபிடிக்கிற ‘துக்ளக்’ தர்பாரை மோடி நடத்தி இருக்கிறார்.

கருணாநிதி இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் இது. அண்ணா சமாதியில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய 6 அடி நிலத்தை கொடுக்க மறுத்த, இவர்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கலாமா?. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் புஷ்பா நகர், அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூ, அயனாவரம் கே.எச். சாலை, நியூ ஆவடி சாலை, ஐ.சி.எப்.சிக்னல், ஓட்டேரி பாலம், பிரிக்ளின் சாலை, வெங்கட்டம்மாள் சமாதி சாலை, புரசைவாக்கம் தானா தெரு, ரெட்டேரி நெடுஞ்சாலை, சைடாம்ஸ் சாலை, அல்லிகுளம் சாலை, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, ஈவ்னிங் பஜார் சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை, தங்கசாலை மணிக்கூண்டு ஆகிய பகுதிகளிலும் திறந்தவேனில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story