பெண்ணிடம் பேசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: 2 பேரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் கைது


பெண்ணிடம் பேசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: 2 பேரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 7 May 2019 4:30 AM IST (Updated: 7 May 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் பேசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர், 2 பேரை துப்பாக்கியால் சுட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

நாகை,

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. இங்கு குருமகா சன்னிதானமாக உள்ள அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் பாதுகாவலராக (பி.எஸ்.ஓ.) ஆயுதப்படை போலீஸ்காரர் ஜெத்தன்ராஜ்(வயது 30) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், திருவாவடுதுறை கடைவீதியில் பெட்டிக்கடை நடத்திவரும் ஒரு பெண்ணின் கடைக்கு சென்று அந்த பெண்ணிடம் கடந்த சில நாட்களாக தகாதமுறையில் பேசிவந்தார். வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கும் அந்த கடைக்கு சென்ற ஜெத்தன்ராஜ் அந்த பெண்ணிடம் தகாதமுறையில் பேசினார்.

அதைப்பார்த்த மதியழகன்(46) என்பவர், அந்த பெண்ணிடம் ஜெத்தன்ராஜ் பேசுவதை தனது செல்போனில் படம்பிடித்தார். உடனே போலீஸ்காரர் ஜெத்தன்ராஜ், மதியழகனின் செல்போனை பறித்துக்கொண்டு அவரை அங்கிருந்து செல்லுமாறு விரட்டினார். மதியழகன் தனது செல்போனை திருப்பித்தருமாறு கேட்டதற்கு, ஜெத்தன்ராஜ் தரமறுத்தார்.

ஆனாலும் மதியழகன் தொடர்ந்து தனது செல்போனை தரும்படி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் ஜெத்தன்ராஜ், ஆதீனத்தின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியால் மதியழகனின் இடது கால் பகுதியில் சுட்டார்.

அதைப்பார்த்த அந்த கிராம நாட்டாண்மை செல்வராஜ் (40) என்பவர், ஜெத்தன்ராஜிடம் தட்டிக்கேட்டார். அப்போது மேலும் ஆத்திரம் அடைந்த ஜெத்தன்ராஜ், நாட்டாண்மை செல்வராஜ் காலிலும் துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு அவரது இடது காலை துளைத்துக்கொண்டு வலது காலிலும் பாய்ந்தது. இதனால் செல்வராஜின் 2 கால்களிலும் காயம் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த மதிவாணன்(54) என்பவரையும், ஜெத்தன்ராஜ் துப்பாக்கியால் தாக்கினார். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு கிராம மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் ஜெத்தன்ராஜை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் ஜெத்தன்ராஜ் வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கிருந்த ஜெத்தன்ராஜின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர். பின்னர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மதியழகன், செல்வராஜ் ஆகிய இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் பதுங்கியிருந்த போலீஸ்காரர் ஜெத்தன்ராஜை பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தையொட்டி திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் கிராமத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ்காரர் ஜெத்தன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ்காரர் ஜெத்தன்ராஜ் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர். 2013-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர் 2017-ம் ஆண்டு முதல் நாகை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

Next Story