கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 7 கிராமங்களில் மறுதேர்தல் நடத்தக்கோரி வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்


கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 7 கிராமங்களில் மறுதேர்தல் நடத்தக்கோரி வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 8 May 2019 10:15 PM GMT (Updated: 2019-05-09T03:49:52+05:30)

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 7 கிராமங்களில் மறுதேர்தல் நடத்தக்கோரிய வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் தமிழ் மீனவர் கூட்டமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடலோர பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் சின்னத்துறை, கடியப்பட்டினம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட 7 கிராமங்களில் உள்ள சுமார் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளன.

தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததை கண்டு, இந்த ஊர்களை சேர்ந்த வாக்காளர்கள் கடுமையான அதிர்ச்சியில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீன்பிடி தொழிலில் உள்ளவர்கள். இவர்களுக்கு தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதுகூட தெரியவில்லை.

மேலும், ஒக்கி புயலின்போது மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்போது அரசு பாராமுகமாக செயல்பட்டதால், ஆளும் கட்சிக்கு ஆதரவாக இவர்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என்ற அச்சத்தில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதை தேர்தல் ஆணையம் கவனிக்காமல் விட்டுள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 14 லட்சத்து 67 ஆயிரத்து 796 வாக்காளர்களும், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 15 லட்சத்து 38 ஆயிரத்து 921 வாக்காளர்களும் இருந்தனர். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். நாடு முழுவதும் எல்லா தொகுதிகளிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ள போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பெரும் அளவு குறைந்துள்ளது.

இதுமட்டுமல்ல, இந்த தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பு ஓட்டுபோடும் நேரம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதை உண்மை என்று நம்பி ஏராளமான வாக்காளர்கள், மாலை 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு சென்று, ஓட்டுபோட முடியாமல் அதிருப்தியுடன் திரும்பி வந்துள்ளனர்.

அவர்களது ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எனவே, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 45 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கவேண்டும். பெரும் அளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட 7 கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 12-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story