பா.ஜனதாவின் கைப்பொம்மையான தேர்தல் ஆணையம் வைகோ குற்றச்சாட்டு


பா.ஜனதாவின் கைப்பொம்மையான தேர்தல் ஆணையம் வைகோ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 May 2019 8:40 PM GMT (Updated: 16 May 2019 8:40 PM GMT)

பா.ஜனதா கட்சியின் கைப்பொம்மையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று வைகோ குற்றம்சாட்டினார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலின் கடைசி 7-வது கட்டத்தில் மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கு 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் பிரசாரம் 17-ந் தேதி தான் முடிவுர வேண்டும். ஆனால் கொல்கத்தா வன்முறையைக் காரணம் காட்டி, அங்கு நிலவும் சூழல் காரணமாக தேர்தல் பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாக 16-ந் தேதியே (நேற்று) முடித்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் எதேச்சதிகார செயலாகும்.

மேற்கு வங்காளம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஆளும் பா.ஜனதா அரசுக்கு ஆதரவாகவே இருந்தன. பா.ஜனதா கட்சி மற்றும் அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட புகார்களை அலட்சியப்படுத்திய மாநில தேர்தல் ஆணையம், ஆளும் கட்சியினரின் அடாவடிகள், அத்துமீறல்கள், பண வினியோகம் போன்றவற்றை அனுமதித்துவிட்டு, வெளிப்படையாகவே தன்னை மத்திய, மாநில அரசுகளின் முகவர் போல காட்டிக்கொண்ட காட்சிகளைப் பார்த்தோம்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய மோசமான செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்கு உரியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story