காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே ஒரு பயங்கரவாதி தொல்.திருமாவளவன் சர்ச்சை பேச்சு


காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே ஒரு பயங்கரவாதி தொல்.திருமாவளவன் சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 18 May 2019 11:15 PM GMT (Updated: 18 May 2019 9:12 PM GMT)

மகாத்மா காந்தி ஒரு இந்து தீவிரவாதி என்றும், கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி என்றும் திருமாவளவன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் பேசினார்.

சென்னை,

இலங்கை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழீழ படுகொலையின் 10-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை அசோக்நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஈகைச்சுடரை ஏற்றி வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரை ஆற்றினார்.

ஈழத் தமிழர் பிரச்சினை

அப்போது அவர் பேசியதாவது:-

ஈழத்தமிழர் பிரச்சினையில் தீர்வு காண வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள தமிழ் அமைப்புகள், இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள், உலகம் எங்கும் பரவி கிடக்கும் தமிழ் அமைப்புகள் இடையே ஒருங்கிணைந்த செயல்திட்டம் உருவாக்க வேண்டும். அவர்களுக்குள் கருத்தியல் ஒறுமைப்பாடு வேண்டும்.

இந்து வெறியர்

பா.ஜனதாவின் சனாதன கொள்கையில் தீவிர எதிர்ப்பு கொண்டதால் தான் நான் கமல்ஹாசனின் கருத்தை ஆதரித்தேன். கமல்ஹாசன் கோட்சேவை தீவிரவாதி என்று கூறியதற்கு ஒருபடி மேல் சென்று பயங்கரவாதி என்று கூறியிருக்க வேண்டும்.

காந்தியும் ஒரு இந்து தீவிரவாதி தான். அவர் மூச்சுக்கு 300 முறை ஹேராம் என்பார். அவருக்கு முற்பிறவி, கர்மவினை மீது நம்பிக்கை உண்டு. கர்மவினை மீது யார் நம்பிக்கை கொண்டாலும் அவர் ஒரு இந்து தீவிரவாதி தான். காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, ஆதவன் உள்பட ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர்.

Next Story