அரவக்குறிச்சி தொகுதியில் காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது - செந்தில் பாலாஜி புகார்


அரவக்குறிச்சி தொகுதியில் காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது - செந்தில் பாலாஜி புகார்
x
தினத்தந்தி 19 May 2019 4:59 AM GMT (Updated: 19 May 2019 4:59 AM GMT)

அரவக்குறிச்சி தொகுதியில் காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது என்று திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி,

மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவும் இன்று நடந்து வருகிறது.

இதில், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தோட்டக்குறிச்சி வாக்குச்சாவடியை பார்வையிட, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று காலை வருவதாக இருந்தது.

அவரை வரவேற்க, திமுக தொண்டர்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே, 300 மீட்டர் தொலைவில் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். 

நாங்கள் வாக்கு சாவடியில் இருந்து முந்நூறு மீட்டருக்கு வெளியே தான் நிற்கிறோம். இங்கிருந்து ஏன் வெளியேற வேண்டும். இதனால் யாருக்கு என்ன பாதிப்பு? என்று திமுகவினர் வாக்குவாதம் நடத்தினர். 

நீங்கள் நிற்பதால் வாக்களிக்க வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து திமுக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் பேருந்துகளை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். பேருந்துகளில் வந்த பயணிகளிடம் வாக்காளர் அடையாள அட்டையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரவக்குறிச்சி தொகுதியில் காவல்துறை ஒருதலைப்பட்சமாகவும், ஆளுங்கட்சிக்கு சாதகமாகவும் செயல்படுகிறது. அரவக்குறிச்சி இடைத்தேர்தலை காவல்துறை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது. மனிதாபிமானமில்லாமல் காவல்துறையினர் நடக்கின்றனர் என அவர்  புகார் தெரிவித்துள்ளார்.

Next Story