தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஆணை
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் 9 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது.
விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அளிக்கப்படுவது வழக்கம். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படியை உயர்த்தி வழங்கும்போதும் தமிழக அரசும் அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி அளிக்கிறது.
ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு கடந்த பிப்ரவரி 20-ந் தேதி அறிவித்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதால் அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வெளியிடவில்லை.
தற்போது தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இப்போது 9 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படி 12 சதவீதமாக உயர்த்தி அளிக்கப்படும். அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு அளிக்கப்படும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நிலுவைத்தொகைகள் உடனடியாக சம்பளக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
உயர்த்தப்பட்டுள்ள அக விலைப்படி, அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்கள், அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடல் கல்வி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும், வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள், மதிய உணவு அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், எழுத்தர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story