உலக அளவில் முதலீட்டுக்கு உகந்த நாடு இந்தியா: சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு


உலக அளவில் முதலீட்டுக்கு உகந்த நாடு இந்தியா: சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 21 May 2019 8:00 PM GMT (Updated: 21 May 2019 7:05 PM GMT)

உலக அளவில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா விளங்குகிறது என்று சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேசினார்.

சென்னை,

‘கிரேட் லேக்ஸ்’ மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

மேலாண்மை கல்வி பாடப்பிரிவு என்பது தொழில்துறையினருக்கு மட்டுமானது அல்ல. தொழில்துறை, எரிசக்தி மேலாண்மை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவுகளில், மேலாண்மை கல்வியை மாணவர்கள் பயன்படுத்தவேண்டும். மேலாண்மை கல்வியில் உலக அளவில் சிறந்து விளங்குவதற்கு உலகளாவிய அளவில், ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகள், செயல்முறைகள் மற்றும் பாடப்பிரிவுகளை நாம் பின்பற்ற வேண்டும்.

இதற்காக பிற மேலாண்மை நிறுவனங்களோடு நாம் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். நமது அரசு பிற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள கல்வி பரிமாற்ற ஒப்பந்தங்களின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை மேலாண்மை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு, மேலாண்மை கல்வியை மேம்படுத்தவேண்டும். சர்வதேச அளவில் உள்ள தரமான நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவது நமது மாணவர்களுக்கு சிறந்த கல்வி அனுபவங்களை அளிக்க வாய்ப்பினை ஏற்படுத்தும்.

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் உலக அளவில் தரமான கல்வி நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் சர்வதேச நிறுவனங்களோடு பரஸ்பர பரிமாற்றம் செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் பிற நாடுகளில் உள்ள மேலாண்மை கல்வி பற்றி தெரிந்துகொள்ள வழி ஏற்படுகிறது. இந்த நூற்றாண்டில் உள்ள மக்கள் உறுதியான மற்றும் சாதனைகள் புரிய வேண்டும் என்ற வேட்கையோடு இருக்கிறார்கள்.

மாறிவரும் தொழில்நுட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதுமைகளை படைக்கவேண்டும் என்ற கலாசாரம் வளர்ந்து வருவது மேலாண்மை கல்விக்கு ஒரு சவாலாக உள்ளது. திறன் மேம்பாடு, திறன் மறு மேம்பாடு, கற்பது மற்றும் கற்பதில் சிறந்த வரையறைகளை பின்பற்றுவது ஆகியவை தனிநபர் வளர்ச்சிக்கு முக்கியமான காரணிகள் ஆகும். அண்மையில், வெளியிடப்பட்ட பிளஸ்-2 தேர்வில் சாதனைகளை நிகழ்த்திய திறமை வாய்ந்த மாணவர்கள் அதிகமானவர்கள் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் ஆக்கப்பூர்வமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள, தரமான கல்வியை பெற விரும்புகிறார்கள்.

நமது நாட்டின் வருங்காலத்தில் இவர்களது பங்கு முக்கியமானதாக இருக்கும். அவர்களுடைய சாதனைகள் பற்றி நாம் மகிழ்ச்சியடையும் அதே வேளையில், உலக தரத்திலான உயர்கல்வியை அளித்து உலக அளவில் மாணவர்கள் வேலைவாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்யும் பொறுப்பும் நமக்கு உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், உலகில் 6-வது மிகப்பெரிய பொருளாதாரமாக நம் நாடு உருவெடுத்திருக்கிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பொருளாதார வளர்ச்சி குறித்து தரவரிசைப்படுத்தும் சர்வதேச நிதி நிறுவனமான ஐ.எம்.எப். உள்ளிட்ட உலகளாவிய நிறுவனங்கள், இந்தியாவின் வளர்ச்சியை அங்கீகரித்துள்ளன. இதனால் உலக அளவில் முதலீட்டுக்கு உகந்த சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது. புதிய தொழில் தொடங்குவதற்கு உலக அளவில் 2-வது உகந்த நாடாகவும் விளங்குகிறது. மாணவர்கள் கல்வியை முழுமையாக கற்று, அந்த கல்விக்கு ஏற்றவாறு வாழவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story