பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சி.பி.ஐ. அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்


பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சி.பி.ஐ. அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்
x
தினத்தந்தி 22 May 2019 2:30 AM IST (Updated: 22 May 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக, சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜரானார்.

சென்னை,

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 1-ந்தேதி, சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் இந்த விவகாரம் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிக்க ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சி.பி.ஐ. தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது.

இதனை ஏற்று சென்னை பெசன்ட்நகரில் ராஜாஜி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக நேற்று காலை 11 மணிக்கு நக்கீரன் கோபால் வந்தார். அவருடன் வக்கீல் சிவகுமார் என்பவரும் வந்தார். சி.பி.ஐ. அலுவலகத்தில் நடந்த 1½ மணி நேர விசாரணைக்கு பின்னர் நக்கீரன் கோபால் வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் விட்டாலும் பொள்ளாச்சி விவகாரம் என்னை விடுவதில்லை. இந்த விவகாரத்தில் ஒரு சாட்சியாக சி.பி.ஐ. என்னை கூப்பிட்டிருந்தனர். இதேபோல தான் சி.பி.சி.ஐ.டி. என்னை சாட்சியாக கூப்பிட்டார்கள். ஆனால் விசாரணை கைதியாக நடத்தினார்கள். சி.பி.ஐ. என்னை சாட்சியாக அழைத்து சாட்சியாகவே விசாரித்தார்கள்.

பொள்ளாச்சி விவகாரத்தை சரியான பாதையில் சி.பி.ஐ. கொண்டு செல்கிறது என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. வீடியோ-ஆடியோ ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம்.

இவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்கிறது. இந்த விவகாரத்தை ஒன்றுமே இல்லாமல் செய்வதற்கு ஒரு பிரிவினர் பாடுபட்டு வருகிறார்கள். சி.பி.ஐ. இன்னும் சில ஆவணங்களை கேட்டுள்ளார்கள்.

பொள்ளாச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் தாண்டி ஆட்கள் இருக்கிறார்கள். இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நிச்சயம் சி.பி.ஐ. உண்மையை வெளிக்கொண்டு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story