எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு முடிவு ஜூன் 5-ந் தேதி வெளியாகும்


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு முடிவு ஜூன் 5-ந் தேதி வெளியாகும்
x
தினத்தந்தி 22 May 2019 4:15 AM IST (Updated: 22 May 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(நீட்) மே 5-ந் தேதி நடைபெற்றது.

சென்னை,

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(நீட்) மே 5-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதி உள்ளனர்.

நாடு முழுவதும் 147 நகரங்களில் 2 ஆயிரத்து 500 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. புயல் பாதிப்பால் ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்பட 11 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது.

கடுமையான கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுடன் நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 5-ந் தேதி தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட உள்ளது. நீட் தேர்வில் தகுதி உடையவர்கள் கலந்தாய்வு முறையில் எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.

Next Story