மும்மொழி திட்டத்தை மீண்டும் கொண்டுவந்து விடலாம் என்று ‘பா.ஜ.க. அரசு கனவில் நினைத்தால் கூட பேரிடர் ஏற்பட்டுவிடும்’ மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


மும்மொழி திட்டத்தை மீண்டும் கொண்டுவந்து விடலாம் என்று ‘பா.ஜ.க. அரசு கனவில் நினைத்தால் கூட பேரிடர் ஏற்பட்டுவிடும்’ மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Jun 2019 5:12 AM IST (Updated: 2 Jun 2019 5:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் மும்மொழி திட்டத்தை மீண்டும் கொண்டுவந்து விடலாம் என்று பா.ஜ.க. அரசு கனவில் நினைத்தால் கூட அவர்களுக்கு பேரிடர் ஏற்பட்டுவிடும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“இந்தி உள்ளடக்கிய மும்மொழி திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்” என்று கஸ்தூரி ரங்கன் தலைமையிலான “புதிய கல்வி கொள்கை” வகுக்கும் குழு அளித்துள்ள பரிந்துரைக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் ஒருமைப்பாட்டையும், செம்மொழியாம் தாய்த் தமிழைச் சிறுமைப்படுத்தி ஒதுக்கவும் மொழிவாரி மாநிலங்களின் தேசிய உணர்வுகளில் வெந்நீர் ஊற்றும் விதத்திலும், “ப்ரீ ஸ்கூல் முதல் 12-ம் வகுப்பு வரை இந்தி வழிக்கல்வி” என்ற விபரீதமான நாட்டைப் பிளவுபடுத்தும் பரிந்துரையை இந்த குழு அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

மொழி உணர்வு தமிழர்களின் ரத்தத்தில் இரண்டறக் கலந்தது. அந்த ரத்தத்தில் “இந்தி” என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாக செலுத்த முயன்றாலும் அதை தி.மு.க. ஒரு போதும் சகித்துக்கொள்ளாது. கடுமையாக எதிர்த்து போர்தொடுக்கும். தமிழ்நாட்டு மக்களையும், மாணவர்களையும் தூண்டிவிட்டு மீண்டுமொரு மொழிப் போராட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு வழி அமைத்து விடாது என்றே இன்னும் நம்புகிறேன். அன்னைத் தமிழின் பெருமையைச் சீர்குலைக்கும் எவ்வித பரிந்துரைகளையும் தி.மு.க. ஏற்றுக்கொள்ளாது.

புதிய வரைவுக் கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டத்தை பரிந்துரைத்ததோடு, “குருகுலக் கல்வி முறையைக் கொண்டுவர வேண்டும்”, “சமஸ்கிருதத்தை அனைத்துப் பள்ளிகளிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் பயிற்றுவிக்க வேண்டும்”, “எளிய முறையில் சமஸ்கிருதம் கற்கும் நூல்களை அதிக எண்ணிக்கையில் பள்ளிகளில் இடம்பெறச் செய்ய வேண்டும்”, “இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள இந்தி ஆசிரியர்களை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி இந்தி கற்றுக் கொடுக்கச் சொல்ல வேண்டும்”, “அதற்காக இந்தி பேசும் மாநிலங்களும், இந்தி பேசாத மாநிலங்களும் ஆசிரியர் பரிமாற்ற ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும்” என்ற இந்தி பேசாத மக்களுக்கு காலப்போக்கில் பேரபாயத்தை ஏற்படுத்தும் பரிந்துரைகள், அந்த வரைவு அறிக்கையில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அளிக்கப்பட்டுள்ள மிகச் சில பரிந்துரைகளின் மீதான நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் சிதைத்துவிட்டது.

ஆகவே புதிய வரைவுக் கல்வி கொள்கை-2019-ன் நோக்கம் கல்வியின் தரத்தை உயர்த்துவது என்று நினைப்பதற்கு பதில், இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைக் கட்டாயமாக திணிக்கவும், சமஸ்கிருதத்தை வம்படியாக பள்ளிகளில் புகுத்தி இளைஞர்களின் மனங்களைப் பாழ்படுத்தவும், திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட உள்நோக்கம் நிறைந்த அறிக்கையே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும்” என்று பிரதமர் நேருவின் உறுதிமொழி இன்னும் நாடாளுமன்றத்தின் பதிவேடுகளில் இருக்கிறது. இரு மொழிக் கொள்கைத் தீர்மானத்தின் மீது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்று “இனி பள்ளிகளில் இந்தி வேண்டாம்” என்று 50 வருடங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டது இன்னும் சட்டமன்றப் பதிவேடுகளில் இருக்கிறது.

தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட “தமிழ் கட்டாயம் கற்க வேண்டும்” என்று சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொழி பற்றி பரிந்துரை செய்யும் முன்பு இதுபோன்ற வரலாறுகளை இந்த குழு ஆராய்ந்ததாகவோ, அவற்றின் அடிப்படை நோக்கங்களைப் புரிந்து கொண்டதாகவோ தெரியவில்லை. அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள மாநில மொழிகளின் வரலாறு தெரியாமலேயே இந்தி மொழி, சமஸ்கிருதம் போன்ற இரு மொழிகளை மட்டும் கட்டாயமாக திணித்து ஒரு மும்மொழி திட்டத்தை தமிழ்நாட்டிலும், இந்தி பேசாத மாநிலங்களிலும் புகுத்தி, அதன் மூலம் நாட்டைப் பேதப்படுத்தவும் இந்த குழு பரிந்துரை செய்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைக்கும் கேடுகெட்ட செயலாகும்.

ஆகவே நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழி திட்டம் என்ற போர்வையில் இந்தியைத் திணிக்கும் கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் பரிந்துரையை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும். இதுகுறித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதுமே தங்களது வலுவான எதிர்ப்பைத் தெரிவித்து இந்த கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்துவார்கள்.

பா.ஜ.க. அரசின் மத ரீதியான, மொழி ரீதியான கலாசார மேலாதிக்க “அஜெண்டாக்களுக்கு” எல்லாம் அடங்கி ஒடுங்கி ஆதரவுக் கரம் நீட்டும் அ.தி.மு.க. அரசு இதற்கும் “ஆமாம் சாமி” போடாமல், இப்போதே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வெளிப்படையாக எதிர்ப்பு காட்டி தடுத்து நிறுத்தும் தைரியம் இல்லையென்றால், கட்சியின் பெயரில் உள்ள “அண்ணா, திராவிட” என்ற இரு சொற்களையும் நீக்கிவிடவேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில் கல்வீசி தமிழ்நாட்டில் மும்மொழி திட்டத்தை மீண்டும் கொண்டுவந்து விடலாம் என்று மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தன் கனவின் ஓரத்தில் கூட நினைத்துப் பார்க்க எத்தணிக்கக்கூடாது. அப்படிப்பட்ட பேராசைக்கனவும் அதற்காக பிழையான காரியமும் அவர்களுக்கு பேரிடரை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story