காயிதே மில்லத் 124வது பிறந்த நாள்; நினைவிடத்தில் துணை முதல் அமைச்சர் மரியாதை
காயிதே மில்லத் 124வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் துணை முதல் அமைச்சர் ஓ.பி.எஸ். மரியாதை செலுத்தினார்.
சென்னை,
இந்தியாவின் பெருமைமிகு முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான காயிதே மில்லத்தின் 124வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்த பள்ளிவாசலில் அவரது நினைவிடத்திற்கு சென்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் வாழ்த்துகளை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுடைய பிறந்த நாள் மற்றும் ரமலான் பண்டிகை ஆகிய இரண்டும் ஒரே நாளில் இணைந்து வருவது சிறப்பிற்குரியது. அவரது புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் தமிழக அரசு அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறது.
காயிதே மில்லத்தின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். கடலில் கரைத்த பெருங்காயம் போன்று அ.ம.மு.க.வின் நிலை உள்ளது. அது கட்சியே அல்ல. ஒரு குழு என குறிப்பிடலாம் என்று அவர் கூறியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியுடன் உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story