மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்; நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்


மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்; நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்
x
தினத்தந்தி 6 Jun 2019 3:26 AM GMT (Updated: 6 Jun 2019 3:26 AM GMT)

மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்தினை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை, 

நீட் தேர்வு முடிவு வெளியாகி உள்ள நிலையில் மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:–

தமிழகத்தில் 350 மருத்துவ படிப்புக்கான இடங்களை இந்த ஆண்டு அதிகரித்து இருக்கிறோம். மேலும் 508 எம்.டி., எம்.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. எந்த மாநிலத்திலும் ஓராண்டில் இந்த அளவிற்கு இடங்கள் அதிகரிக்கப்படவில்லை.

நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி அடிப்படையில் மருத்துவ கவுன்சில் மருத்துவ படிப்புக்கான இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது.

தேர்வு நேரத்தில் மன அழுத்தம் யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. அதை போக்குவதற்காக 104 சேவை நடைமுறையில் இருக்கிறது. எந்த தேர்வாக இருந்தாலும், பொதுவாக தன்னம்பிக்கையோடு மாணவ–மாணவிகள் இருக்க வேண்டும். நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வருகின்றன. இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

நீட் தேர்வு முடிவு வெளியாகி உள்ள நிலையில், ஆன்லைன் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்ய இருக்கிறோம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. 7ந்தேதி (நாளை) முதல் மாணவ–மாணவிகள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர், அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story