நீட் தேர்வு; சென்னை அரசு பள்ளி மாணவிக்கு முதற்கட்ட நிதியுதவி வழங்கினார் தமிழிசை சவுந்தரராஜன்


நீட் தேர்வு; சென்னை அரசு பள்ளி மாணவிக்கு முதற்கட்ட நிதியுதவி வழங்கினார் தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 8 Jun 2019 7:46 AM GMT (Updated: 8 Jun 2019 7:52 AM GMT)

நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அரசு பள்ளி மாணவி ஜீவிதாவை நேரில் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் முதற்கட்டமாக ரூ 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

சென்னை,

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி ஜீவிதா நீட் தேர்வில் வெற்றி பெற்று 720 மதிப்பெண்ணுக்கு 605 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.  இந்நிலையில் அவரது மருத்துவ படிப்புக்கு உதவுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஏழை தையல் தொழிலாளர் மகள் மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன்.

ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவ கனவு நனவாகட்டும்... மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டார்.  இந்த நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அரசு பள்ளி மாணவி ஜீவிதாவை நேரில் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் முதற்கட்டமாக ரூ 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, நீட் தேர்வு குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை அரசியல் கட்சி தலைவர்கள் தவிர்க்க வேண்டும்.  தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது என கூறினார்.  தமிழிசை செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த ஜீவிதா, அரசுப்பள்ளியில் படித்தாலும் நீட் தேர்வில் வெற்றிபெறலாம் என்றும், மாணவர்கள் தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

Next Story