‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு


‘மாவட்ட தலைவர்கள் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும்’ காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கெடு விதிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 10:30 PM GMT (Updated: 21 Jun 2019 9:54 PM GMT)

மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் 3 விதமான தேர்வை சந்திக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கெடு விதித்தார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உள்ளாட்சி தேர்தல் குறித்த மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், சிரிவல்லபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.பி., முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம் உள்பட பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடங்கி வைத்து கே.எஸ்.அழகிரி பேசினார்.

கூட்டத்தில் கே.எஸ். அழகிரி பேசியதாவது:- மாநில காங்கிரஸ் தலைமை மாறும்போது பொதுவாக 10 அல்லது 20 மாவட்ட தலைவர்களை மாற்றுவார்கள். இது கடந்த காலங்களில் நடந்த வரலாறு. தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இதுபோன்ற நடவடிக்கைக்கு கட்சியின் தேசிய தலைமை அனுமதி வழங்கும். ஆனால் நான் மாவட்ட தலைவர்களுக்கு 3 விதமான தேர்வு வைக்க இருக்கிறேன். அது என்ன மாதிரி தேர்வு என்பதை பின்னால் சொல்கிறேன். தேர்வில் வெற்றி பெறுகிறவர்களே மாவட்ட தலைவர்களாக நீடிக்க முடியும். மற்றவர்கள் இப்போதே விலகிக்கொள்ளலாம்.

உள்ளாட்சித் தேர்தலில் அவரவர் மாவட்டங்களில் 100 சதவீதம் காங்கிரசார் போட்டியிட ஏற்பாடு செய்ய வேண்டும். வெற்றிக்கு கூட்டணியை நம்பியிருக்கக் கூடாது, அவர்கள் வெற்றிக்கு உதவுவார்கள், நாம் தான் உழைக்க வேண்டும்.

இவ்வாறு கே.எஸ். அழகிரி பேசியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தொடர்ந்து நீடிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிய கல்விக்கொள்கை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட தலைவர்கள் தமிழகம் முழுவதும் கருத்தரங்கம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story