அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை: ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம்' ஜெயக்குமார் கருத்து


அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை:  ‘தங்கதமிழ்ச்செல்வன் வந்தால்  ஏற்றுக்கொள்வோம்  ஜெயக்குமார் கருத்து
x
தினத்தந்தி 22 Jun 2019 9:02 PM GMT (Updated: 22 Jun 2019 9:02 PM GMT)

அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை என்றும், தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் (அ.ம.மு.க.) கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன். இவர் நடந்து முடிந்த தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் களம் இறங்கி தோல்வியை தழுவினார்.

இந்தநிலையில் தேர்தலுக்கு பின்னர் அ.ம.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் சிலர் விலகி, மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்து வருகின்றனர். அந்தவகையில் தங்கதமிழ்ச்செல்வனும் அ.ம.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் சேரப்போவதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது.

இதற்காக தங்கதமிழ்ச்செல்வன் சமீபத்தில் சில மூத்த அமைச்சர்களை சந்தித்ததாகவும், அவர்களிடம் அ.தி.மு.க.வில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

அ.ம.மு.க. ஒன்றும் இல்லாத புஷ்வானம் ஆகிவிட்டது. இதனால் அந்த கூடாரம் காலி ஆகிவிட்டது. எனவே பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் வந்து சேரவேண்டும் என்று முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உள்பட அனைவரும் வேண்டுகோள் விடுத்து வருகிறோம். ஜெயலலிதா கூறியது போன்று பல நூற்றாண்டுகள் இந்த கட்சியும், ஆட்சியும் நிலைக்கவேண்டும். இதற்காக பிரிந்து சென்றவர்கள் வந்து சேருங்கள்.

சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் உள்பட அவருடைய குடும்பத்தினர் தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. தங்கதமிழ்ச்செல்வன் உள்பட என்னுடைய நண்பர்கள் யார் வந்து சேர்ந்தாலும் ஏற்றுக்கொள்வோம். தங்கதமிழ்ச்செல்வன் இப்போது அ.தி.மு.க.வில் சேருவது என்ற சரியான பாதைக்கு வந்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே அ.தி.மு.க. வில் இணையப்போவதாக வெளியான தகவல் குறித்து தங்கதமிழ்ச்செல்வனிடம் கேட்டதற்கு அவர் பதில் எதுவும் கூற மறுத்துவிட்டார். மேலும் அவருடைய செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது, அதை தவிர்த்துவிட்டார்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீசுவரர் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. இதில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கோவில் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

யாகம் முடிந்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- காங்கிரசை எத்தனை நாட்களுக்குத் தான் நாங்கள் தூக்கி சுமப்பது, உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியிருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- இது அவர்களுடைய கூட்டணி கட்சி பிரச்சினை. காங்கிரஸ் கட்சி தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு சிந்துபாத் கதையை போன்று 1967-ம் ஆண்டுக்கு பிறகு யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறது.

கேள்வி:- சட்டமன்றம் கூட இருக்கிறது. எதிர்க்கட்சி எழுப்பும் பிரச்சினைகளை தயார்கொள்ள அ.தி.மு.க. தயாராக இருக்கிறதா?

பதில்:- அனைத்தையும் எதிர்கொள்வதற்காக திராணி, தெம்பு, தைரியம் ஆட்சிக்கும், கட்சிக்கும் இருக்கிறது. அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லாததால் தண்ணீரை வைத்து அரசியல் செய்கிறார்கள். இந்த சூழ்நிலையிலும் லாரி மூலமாக 520 எம்.எல்.டி. தண்ணீர் கொடுப்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தால் நல்லது. நாங்கள் அவரை எதிர்க்கட்சியாக பார்க்கிறோம். ஆனால் அவர் எங்களை எதிரியாகவே பார்க்கிறார். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story