கோவை - பாலக்காடு இடையே சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு


கோவை - பாலக்காடு இடையே சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 1 July 2019 4:11 AM IST (Updated: 1 July 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

கோவை-பாலக்காடு இடையே நடந்த சாலை விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை,

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை டவுன் பகுதியைச் சேர்ந்த பைரோஜி பேகம் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆம்னி வேனில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் சம்சுத் கனி மகனும், வேன் ஓட்டுநருமான ஷாஜஹான், அப்துல் மஜித் மனைவி பைரோஜி பேகம், காதர் மொய்தீன் மகன் ரியான், காதர் மொய்தீன் மகள் ஷெரின் மற்றும் சையது முஹம்மது என்பவரின் குழந்தை அப்னா பிர்ஜா ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். முகம்மது நிசார் என்பவரின் மகன் முகம்மது ரித்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துயரமான செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

சாலை விபத்தில் உயிரிழந்த இந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்து குறித்து அறிந்தவுடன் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திந்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டச் செயலாக்கம் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கும், கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டேன்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story