நாடாளுமன்ற தேர்தலில் உண்மைக்கு மாறான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி : சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தேர்தலில் உண்மைக்கு மாறான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி பேசினார்.
சென்னை,
சட்டசபையில் நேற்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் உதயசூரியன் (சங்கராபுரம் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
உறுப்பினர் உதயசூரியன்:- நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுசாமி 5 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்திலும் 3-வது பெரிய கட்சியாக தி.மு.க. உள்ளது.
அமைச்சர் செல்லூர் ராஜூ:- வெற்றி - தோல்வி என்பது மாறி, மாறி வரும். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று, 3-வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் இருந்தது. ஆனால், நீங்கள் நிறைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தான் இந்த முறை வெற்றி பெற்றீர்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- என்னென்ன அறிவிப்பு கொடுத்தார்கள் என்று நாட்டு மக்களுக்கு தெரியும். எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்றீர்கள் என்பதை நாட்டு மக்கள் உணர்வார்கள். எவ்வளவு அறிவிப்புகள், கடன் தள்ளுபடி, 5 சவரனுக்கு கீழே இருந்தால் தள்ளுபடி, அதுபோல், வங்கிகளில் வாங்கிய கல்விக்கடன் தள்ளுபடி, குடும்பத்திற்கு ரூ.6 ஆயிரம் என்று உண்மைக்கு மாறான கருத்துகளைச் சொல்லித்தான் ஓட்டு பெற்றிருக்கின்றீர்களேயொழிய, மக்களாக கொடுக்கவில்லை.
நான் எந்த இடத்திலும் அப்படி எந்த வாக்குறுதிகளையும் கொடுக்கவில்லை. நாங்கள் நடக்கின்ற திட்டங்களையும், இனி நடக்கவிருக்கின்ற திட்டங்களையும் சொன்னோம். உங்களுக்கு துணிவிருந்தால், அப்படி சொல்லி வெற்றி பெற்றிருந்தால் பரவாயில்லை. மக்களை ஏமாற்றி, ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது அதை ஏமாற்றி மிட்டாய் கொடுத்து அதைக் கடத்துவது போல மக்களுக்கு நிறைவேற்ற முடியாத திட்டங்களைச் சொல்லி ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றி தான் இந்த வெற்றி.
அண்மையிலே ஓராண்டுக்கு முன்பு ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியிலே கூட்டணி அமைத்து போட்டியிட்டு டெபாசிட் இழந்தீர்கள். ஆனால், நாங்கள் உங்களைவிட அதிகமான வாக்குகளை பெற்றோம். டெபாசிட் இழந்த நீங்களே இவ்வளவு வெற்றி பெறுகின்றபொழுது, நாங்கள் ஏன் வெற்றி பெற முடியாது? நீங்கள் மேலேயும் ஆட்சி, கீழேயும் ஆட்சி என்றீர்கள், மக்கள் தொங்கலில் விட்டு விட்டார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- எந்த அடிப்படையில், உண்மைக்கு புறம்பானது என்று சொல்கின்றார்கள் என்பது எனக்கு புரியவில்லை. நாங்கள் சொன்னது வெற்றிபெற்று பொறுப்புக்கு வருகின்ற நேரத்தில், இதை நிச்சயமாக நிறைவேற்றும் என்ற அந்த அடிப்படையில் தான் இந்த வாக்குறுதிகள் தேர்தல் நேரத்தில் எடுத்துச் சொல்லப்படுகின்றது. இப்பொழுதும் சொல்கின்றோம். விரைவில் ஆட்சிக்கு நாங்கள் (தி.மு.க.) தான் வரப்போகின்றோம். அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றத்தான் போகின்றோம். அதில் எந்த அளவுக்கும் சந்தேகம் இல்லை.
அமைச்சர் ஜெயக்குமார்:- நாங்கள் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம். பொங்கலுக்கு ரூ.1,000 கொடுப்பதாக நாங்கள் சொல்லவில்லை. ஆனால் கொடுத்தோம். இப்போது ரூ.2 ஆயிரம் கொடுப்பதாக சொல்லியிருக்கிறோம். அதையும் கொடுப்போம். 2021-ம் ஆண்டும் அ.தி.மு.க. ஆட்சி தொடரும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
Related Tags :
Next Story