மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று பிரசாரம் செய்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் எதிர்ப்பு குரல் கொடுக்காதது ஏன்? சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடகாவில் ராகுல்காந்தி பிரசாரம் செய்தபோது அதற்கு ஏன் காங்கிரஸ் எதிர்ப்பு குரல் கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கேட்டார்.
சென்னை,
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி தண்ணீர் பிரச்சினை குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):-கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் தண்ணீரை சேமித்து வைக்க இந்த அரசு ஒரு அணைக்கட்டாவது கட்டியிருக்குமா?. இதுபோன்ற திட்டங்கள் அரசிடம் இல்லை. தண்ணீரை கொண்டு வர உங்களுக்கு அக்கறை இல்லை.
(இவ்வாறு அவர் குறிப்பிட்டதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறுக்கீட்டு, அவருக்கு பதில் அளித்து பேசினார்)
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- உறுப்பினர் பேசுகின்ற போது குறுக்கிட வேண்டாம் என்று தான் இருந்தேன். தொடர்ந்து குற்றச்சாட்டுகளையே சொல்லிக் கொண்டு இருக்கிறார். கடந்த காலத்தில் சித்தராமைய்யா முதல்-மந்திரியாக இருக்கும் போது, கடுமையான குடிநீர் பிரச்சினை இருந்தபோது, 5 டி.எம்.சி. தண்ணீர் கொடுங்கள். நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரிலிருந்து திறந்துவிடுங்கள் என்று சொன்னோம், கோரிக்கை வைத்தோம், கடிதம் எழுதினேன், நானே நேரடியாக வந்து உங்களை சந்திக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
அங்கே உங்களுடைய கட்சியைச் சேர்ந்த கூட்டணி ஆட்சி தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆகவே, தயவு செய்து இவ்வளவு பேசுகின்ற நீங்கள், அந்த தண்ணீரை திறந்து விட்டால், இங்கே மேட்டூர் அணையிலிருந்து வீராணத்திற்கு தண்ணீரை கொண்டு வந்து, இங்கே நமக்கு தண்ணீரை எளிதாக வழங்கலாம். அதுமட்டுமல்ல, நான் ஏற்கனவே சொன்னதைப்போல, நமக்கு ஏற்கனவே கிடைக்க வேண்டிய நீர் இப்போது பிரச்சினையில் இருந்து கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கொடுத்திருக்கின்றது. 50 ஆண்டு காலம் சட்டப்போராட்டம் நடத்தி, நீதிமன்றத்தின் வாயிலாக சட்டப்படி தீர்ப்பை பெற்றோம். அந்த தீர்ப்பின் அடிப்படையிலே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
அதை உங்களுடைய கட்சியினுடைய அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி, நாடாளுமன்ற பொது தேர்தலில் பிரசார பொதுக்கூட்டத்திலே கர்நாடகத்திலே பேசுகின்ற போது, காங்கிரஸ் மத்தியிலே ஆட்சி அமைந்தவுடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று சொன்னார்களே, இதுவரை ஒரு எதிர்ப்பு குரல் கொடுத்திருக்கிறீர்களா நீங்கள்? இப்போது அரசை பற்றி இவ்வளவு விமர்சனம் செய்கிறீர்கள். இப்பொழுது காவிரி மேலாண்மை ஆணையம் இருமுறை கூட்டப்பட்டு, நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று முறையாக காவிரி மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியும் கூட நமக்கு மாதந்தோறும் விடுவிக்க வேண்டிய அந்த தண்ணீரை கர்நாடக அரசு இதுவரைக்கும் திறக்கவில்லை. அதற்காக ஏதாவது பதில் கொடுத்தீர்களா? ஆனால் அரசை குறை சொல்கிறீர்கள்.
ஆனால் அரசை பொறுத்தவரைக்கும், இயற்கை பொய்த்துவிட்டது. நீங்கள் ஒரு விவசாயி, மனசாட்சிப்படி நீங்கள் சொல்லுங்கள், தண்ணீர் இருந்து கொடுக்கவில்லையா. ஆகவே, இதை உடனடியாக எங்கேயும் இருந்து எடுத்து கொடுக்க முடியாது. இன்றைக்கு தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 40 ஆண்டு காலம் 50 ஆண்டு காலம் இல்லாத வறட்சி தமிழகத்திலே நிலவுகின்றது. எந்த ஏரியிலும், நீர் நிலையிலும் தண்ணீர் இல்லை. அதேபோல எதிர்க்கட்சி தலைவர் இங்கே குறிப்பிட்டார். இன்றைக்கு அணைகளில் எல்லாம் மிக குறைந்த அளவு தான் தண்ணீர் இருக்கின்றது. சில அணைகள் வறண்டு போய் இருக்கின்றது என்று சொன்னார். உண்மை. இப்படி இருக்கின்ற காலக்கட்டத்தில்கூட அ.தி.மு.க. அரசு மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கி வருகின்றது.
ஜெயலலிதா இருக்கின்றபோது 7,415 எம்.எல்.டி. தண்ணீரை வழங்கினோம். இப்பொழுது 7,508 எம்.எல்.டி தண்ணீரை நாங்கள் வழங்கி கொண்டு இருக்கின்றோம். எல்லாப் பகுதிகளிலும் வழங்கி கொண்டு இருக்கின்றோம். நீங்கள் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியிலே 4,945 எம்.எல்.டி. தண்ணீர் தான் குடிநீருக்காக அந்த அரசு வழங்கியது. இருந்தாலும், இப்பொழுது மழை பொய்த்து விட்டது. ஏரிகள் குளங்களில் எங்கேயுமே தண்ணீர் இல்லை. வறண்டு இருக்கின்றன. நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டது. ஆகவே, நிலத்தடி நீர் கீழே சென்ற காரணத்தினாலே மக்களுக்கு பல்வேறு அன்றாட தேவைகளுக்கான நீர் கிடைக்காத காரணத்தினாலே குடிநீருக்கு வழங்க வேண்டிய நீரை அதிக அளவிலே பயன்படுத்துகின்ற காரணத்தனாலே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறதேயொழிய அரசை பொறுத்தவரைக்கும் ஏற்கனவே வழங்கப்பட்ட குடிநீர் முழுவதும் இப்பொழுதும் வழங்கி கொண்டு இருக்கிறது.
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):-நீங்கள் குழுவை அமையுங்கள். நாங்கள் ஆதரவு தருகிறோம். அந்த குழுவுடன் நாங்களும் வருகிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
Related Tags :
Next Story