புதுச்சேரி கவர்னரை கண்டித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு : சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு


புதுச்சேரி கவர்னரை கண்டித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு : சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 2 July 2019 5:47 AM IST (Updated: 2 July 2019 5:47 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி கவர்னரை கண்டித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால், தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து தண்ணீர் பிரச்சினை குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து, பேசினார்.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்:- தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அணைகளில் தண்ணீர் இல்லை. தண்ணீர் பிரச்சினைக்காக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் 45 சதவீதம் தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது 21 சதவீதம் அளவுக்குத்தான் தண்ணீர் உள்ளது. குடிநீருக்காக குடத்துடன் பலரும் வீதிகளில் அலைவது வேதனையாக இருக்கிறது. இந்த அரசு நிதி ஆயோக் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை.

சென்னை நகரில் ‘ஆன்லைன்’ மூலம் குடிநீர் கேட்டு பதிவு செய்தால் 30 நாட்களில் அதனை பெற முடியாத நிலை இருக்கிறது. தமிழகத்தில் குடிநீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கியதாக தமிழக அரசு தெரிவித்தது.

ஆனால் இதுவரையில் குடிநீர் பெறுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது. குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன திட்டத்தை இந்த அரசு எடுத்துள்ளது. குடிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டசபையில் ஒருநாளை சிறப்பு நேர்வாக ஒதுக்கி, அனைத்து உறுப்பினர்களின் கருத்தையும் கேட்க வேண்டும்.

(தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னர் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்தும் தமிழக மக்கள் குறித்தும் தெரிவித்த கருத்துகளை குறிப்பிட்டு, சில கருத்துகளை தெரிவித்தார்)

சபாநாயகர்:- இல்லை... நீதிபதி பற்றியோ, கவர்னரை பற்றியோ அவையில் விவாதிக்க முடியாது.

அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் பேச அனுமதி கேட்டார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அமைச்சர் பேச சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் புதுச்சேரி துணை நிலை கவர்னர் குறித்து சில கருத்துகளை ஆவேசமாக தெரிவித்தார்.

அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், இதையே தான் தாங்களும் சொல்ல வந்ததாக கோஷமிட்டனர்

சபாநாயகர்:- இங்கு மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தெரிவித்த கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றன. சட்டசபை விதி 92-ன்படி, கவர்னர் குறித்து அவையில் பேச முடியாது.

மு.க.ஸ்டாலின்:- நான் யாரையும் விமர்சித்து பேசவில்லை. ஆனால் தமிழக மக்களை கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி இன்னொரு மாநிலத்தின்.... (இவ்வாறு குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் மீண்டும் சில கருத்துகளை தெரிவித்தார். இந்த கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன).

மு.க.ஸ்டாலின்:- எங்கள் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

இதை தொடர்ந்து மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து வெளியே சென்றனர்.

சட்டசபை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பெடி தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கும் குடிநீர் பஞ்சத்தை பற்றி கருத்து சொல்கின்ற பொழுது, வரம்பு மீறி, தான் ஒரு கவர்னர் என்பதையும் மறந்து சில செய்திகளை தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்திருக்கின்றார். அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று சபையில் நான் கேட்டேன்.

சபாநாயகர் அதற்கு அனுமதி தரவில்லை. இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், ஆளும் கட்சியில் இருக்கக்கூடிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், எழுந்து புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் கிரண்பெடி குறித்து பேசியிருக்கின்றார். எனவே நான் பேசிய பேச்சும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. ஆளும் கட்சியைச் சார்ந்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய பேச்சும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது.

புதுச்சேரி மாநில கவர்னரின் கருத்து கண்டிக்கத்தக்கது. அதனை நாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதனை கண்டிக்கக்கூடிய வகையில் நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கின்றோம்.

புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் கூறியதை உள்ளே அமர்ந்திருக்கக்கூடிய ஆளும் கட்சியைச் சார்ந்த அமைச்சர் கள், சட்டமன்ற உறுப்பினர் கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இருக்கின்றார்கள் என்ற உண்மை தான் வெளிவந்திருக்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தமிழக மக்களை தரக்குறைவாக விமர்சித்த புதுவை கவர்னர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில், “தமிழக மக்கள் மீதான மிக மோசமான தரக்குறைவான விஷமத்தனமான விமர்சனத்தை புதுவை கவர்னர் கிரண்பெடி உடனடியாக திரும்ப பெற்று, தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். தமிழக மக்கள் மீது கண்ணியக்குறைவான விமர்சனம் செய்த புதுவை கவர்னரை, ஜனாதிபதி ஒரு நிமிடம் கூட தாமதம் செய்யாமல் திரும்பப் பெற்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பை அனைவருக்கும் உணர்த்த வேண்டும்” என்று கூறி உள்ளார்.

Next Story