அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவிப்பு
20 ஆயிரம் தொண்டர்களுடன் அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவித்து உள்ளார்.
சென்னை
அமமுகவை சேர்ந்த இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலகி, இன்று அதிமுகவில் தன்னை இணைத்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
சென்னை அசோக் நகரில் அமமுக தலைமை அலுவலகம் இருக்கும் இடம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது ஆகும்.
அமமுகவில் இருந்து இசக்கி சுப்பையா விலக போகிறார் என்று நேற்றே தகவல் வெளியானது. இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாளை அதாவது இன்று தனது அரசியல் ரீதியான முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று இசக்கி சுப்பையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
சில நிமிடங்களுக்கு முன்பு டிடிவி.தினகரன் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது. தினகரன் கிண்டல் செய்தார். இது ஒரு தலைவருக்கு அழகல்ல. டிடிவி பதற்றத்தில் இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தோம். டிடிவி தினகரனே தொண்டர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்தான்.
அதிமுகவில் என்னை அடையாளம் காட்டியது தினகரன் அல்ல, என்னை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா, தினகரன் ஏன் தவறாகவே பேசுகிறார் என தெரியவில்லை.
ஜூலை 6-ந்தேதி அதிமுகவில் 20 ஆயிரம் தொண்டர்களுடன் இணைகிறேன். மக்களின் முதல்வராக பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். சுயநலம் பார்ப்பதாக இருந்தால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதாவில் சேர்ந்து இருப்பேன்.பாஜக மற்றும் திமுகவில் இருந்து அழைப்பு வந்தது, உடன் இருந்தவர்கள் விருப்பத்தின் பேரில் அதிமுகவில் இணைகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story