கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான பட்ஜெட் - மு.க.ஸ்டாலின் கருத்து
மத்திய பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இனிப்பையும் வழங்கியுள்ளது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
மத்திய பட்ஜெட் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், மத்திய பா.ஜ.க. அரசின் பட்ஜெட் வழக்கம்போல் அலங்கார வார்த்தைகளும், அறிவிப்புகளும் நிறைந்த அணிவகுப்பாக காட்சியளிக்கிறதே தவிர கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் வகையில் மாநிலங்களின் உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும் பிரதிபலிக்கப்படவில்லை. இது காதுக்கு விருந்தே தவிர, கருத்துக்கு விருந்தில்லை.
சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச மானியத்தையும் பறிக்கும் முழக்கமே பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல்–டீசல் விலை உயர்வு போக்குவரத்து கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என்பதில் தான் முடியும்.
ரூ.50 லட்சம் கோடி நிதி திரட்டும் வகையில் ரெயில்வே தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு சாதாரண மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிக முக்கியமான ரெயில் போக்குவரத்தை பொதுமக்களிடமிருந்து தட்டிப்பறித்து செல்வந்தர்களுக்கு தாரைவார்ப்பதைப்போல் இருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வைத்துள்ள 51 சதவீத பங்கையும்கூட குறைத்துக்கொள்ளலாம் என்று கொள்கை முடிவை அறிவித்து நீண்டகாலமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் முழுவதுமாக மூடுவிழா நடத்திவிடுவார்கள் போல் இருக்கிறது. 2019–20 நிதி ஆண்டில் மட்டும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் திரட்டிட வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு மத்திய அரசு நிற்பது பெரும் கவலை அளிக்கிறது.
தமிழகத்துக்கு என்று எந்த பிரத்தியேக திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நதிகள் இணைப்பு திட்டம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. குறிப்பாக கோதாவரி–கிருஷ்ணா–காவிரி நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
கடுமையான குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் தமிழ்நாட்டிற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்த ரூ.1,000 கோடி நிதியைக்கூட ஒதுக்கவில்லை. தனிநபரின் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தாத பா.ஜ.க. அரசு தங்களுக்காக தேர்தலில் பாடுபட்டு வெற்றிக்கு வழி அமைத்து கொடுத்த பெரு நிறுவனங்களுக்கு கரிசனத்துடன் ரூ.250 கோடி ‘டர்ன்ஓவர்’ உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகையை ரூ.400 கோடி வரை நீட்டித்து, 99 சதவீத கார்ப்பரேட் கம்பெனிகள் வரிச்சலுகை பெறும் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. அதுவும் போதாது என்று வருமான வரியில் இருந்தும் கார்ப்பரேட்டுகளுக்கு 5 சதவீத கூடுதல் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
பத்திரிகைகள் அச்சடிக்க தேவையான ‘நியூஸ் பிரின்ட்’ இறக்குமதிக்கு புதிதாக 10 சதவீதம் ‘கஸ்டம்ஸ் டூட்டி’ விதித்திருப்பது ‘பிரின்ட் மீடியாக்களை’ அடியோடு முடக்கி, செய்தி பரவலையும், கருத்து சுதந்திரத்தையும் தகர்த்திடும் தந்திரமாக இருக்கிறது. பத்திரிக்கை துறையை நசுக்கும் வகையில் இப்படியொரு வரிச்சுமையை ஏற்றி இருப்பது ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றை பலவீனப்படுத்துவதாக இருக்கிறது.
வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்துவோர், ரூ.2 லட்சம் செலவில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வோர் வருமான வரி கணக்கை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது சுற்றுலா ஆசையுள்ள நடுத்தர மக்களை பாதிக்கும் நடவடிக்கை.
மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பு இல்லாமல், அதைப்பற்றிய கவலையே இல்லாமல், மேல்தட்டு மனப்பான்மையுடன் உப்பரிகையிலிருந்து இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைத்தான் இந்த அறிவிப்புகள் வெளிக்காட்டுகின்றன.
பா.ஜ.க. அரசுக்கு மக்கள் அளித்த வாக்குகளுக்கு அர்த்தமில்லாமல் அவர்களை வஞ்சிக்கும் வகையில் மீண்டும் கார்ப்பரேட்டுகளை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கை ஒரே நாடு–ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை, ஒரே மின்வினியோகம், ஒரே கல்விமுறை என்று மாநில அரசுகளை சிறிதும் சட்டைசெய்யாத, மாநில உரிமைகளை மதிக்காத, அனைத்தையும் மையப்படுத்திடும் முயற்சிக்கு முன்னோட்டமாகவே தெரிகிறது.
இந்த நிதிநிலை அறிக்கை ஏழை–எளிய, நடுத்தர மக்களை கணக்கில் கொள்ளவில்லை, கசப்பைத் தந்திருக்கிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் சாதாரண சாமானியர்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நிதிநிலை அறிக்கை எட்டாத தூரத்தில் நட்டுவைக்கப்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story