மகளுக்கு திருமணம் செய்து வைக்க நளினிக்கு 30 நாட்கள் ‘பரோல்’ - ஐகோர்ட்டு உத்தரவு


மகளுக்கு திருமணம் செய்து வைக்க நளினிக்கு 30 நாட்கள் ‘பரோல்’ - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 July 2019 5:00 AM IST (Updated: 6 July 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக நளினிக்கு 30 நாட்கள் ‘பரோல்’ வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, சென்னை ஐகோர்ட்டில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் எனது மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்து வைக்க தனக்கு 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர், நளினியை ஜூலை 5-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி, நளினி பலத்த பாதுகாப்புடன் நேற்று பிற்பல் 2 மணியளவில் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதிகள் நளினியை முதலில் வாதம் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து எழுதி எடுத்து வந்ததை நளினி வாசித்தபோது கூறியதாவது:-

என் மகளுக்கு 27 வயதாகிவிட்டது. ஒரு தாயாய் என் குழந்தைக்கு எதுவும் செய்தது கிடையாது. பெற்றோரின் கடமைகள் எதையும் அவளுக்கு செய்தது கிடையாது. என் மகளுக்கு திருமணம் செய்துவைக்கும் வாய்ப்பையாவது தரவேண்டும். (இதை அவர் அழுதுகொண்டே கூறினார்)

என் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்க வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள எனது மாமனாரை நான் பராமரிக்க வேண்டும். அதனால் எனக்கு 6 மாதம் பரோல் வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், ‘மனுதாரரை பொறுத்தவரை மகளுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது தான் பிரதான கோரிக்கை. அதற்காக அவர் 6 மாதம் பரோல் கேட்கிறார். ஆனால் சட்டவிதிகளின்படி, அதிகபட்சம் 30 நாட்கள் தான் பரோல் வழங்க முடியும். 30 நாட்களுக்கு மேல் பரோல் வழங்க சிறை அதிகாரிகளுக்கு அதிகாரமே கிடையாது. பேரறிவாளன் கூட 30 நாட்கள் தான் பரோலில் விடுவிக்கப்பட்டார். பரோலில் வெளியில் வந்தால் அவர் எங்கு தங்குவார்? அவருக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்? என்பதை தெரிவிக்க வேண்டும். அவர் வெளியில் வரும்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது. சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடக்கூடாது’ என்றார்.

அப்போது நளினி, ‘கட்டுப்பாடுகளை நான் முழுமையாக ஏற்கிறேன். கடந்த முறை ஒரு நாள் பரோலில் சென்றபோது போலீஸ் பாதுகாப்புக்கு ரூ.16 ஆயிரம் கட்டணமாக வசூலித்தனர். நானும், என் கணவரும் தொடர்ந்து சிறையில் இருப்பதால் எங்களால் போலீசாருக்கு பாதுகாப்பு கட்டணம் வழங்க முடியாது. அதனால் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மாமனார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை பராமரிக்க வேண்டும் என்றும் நளினி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மாமனாரின் உடல்நிலை குறித்த ஆதாரங்களை அவர் தாக்கல் செய்யவில்லை.

எனவே, மகளின் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்குகிறோம். பரோல் காலங்களில் எங்கு தங்கியிருப்பார்? யார் உத்தரவாதம் தருவார்கள்? என்ற விவரங்களை ஒரு வாரத்துக்குள் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நளினி வழங்க வேண்டும்.

அவற்றை அதிகாரிகள் 10 நாட்களுக்குள் பரிசீலித்து, அவரை 30 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும். பரோல் காலம் முடிந்ததும் அவர் சிறைக்கு சென்றுவிட வேண்டும். பரோல் காலங்களில் அரசியல்வாதிகளை, இயக்கவாதிகளை சந்திக்கக்கூடாது. ஊடகங்களுக்கு பேட்டி வழங்க கூடாது.

அவரால் போலீஸ் பாதுகாப்பு செலவை ஏற்கமுடியாது என்பதால் அந்த செலவை தமிழக அரசே ஏற்கவேண்டும். இந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Next Story