பரிசுப்பொருள், பூங்கொத்து பெறக்கூடாது ; காவல்துறையினர் வரதட்சணை வாங்கக்கூடாது - சுற்றறிக்கை அனுப்ப டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பரிசுப்பொருள், பூங்கொத்து பெறக்கூடாது ; காவல்துறையினர் வரதட்சணை வாங்கக்கூடாது - சுற்றறிக்கை அனுப்ப டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 July 2019 4:30 AM IST (Updated: 6 July 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

காவல்துறையினர் வரதட்சணை, பரிசுப்பொருள், பூங்கொத்து வாங்கக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்ப போலீஸ் டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை, 

மதுரையைச் சேர்ந்த தென்னரசு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-

காவல்துறையில் நேரடியாக சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தேன். சிறப்பாக பணிபுரிந்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளேன். சில தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக என் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை காரணம் காட்டி எனக்கு காவல்துறை தலைமையிடம் ஏற்கனவே வழங்கிய இன்ஸ்பெக்டர் பதவி உயர்வை நிறுத்தி வைத்து, கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரது பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதோடு மனுதாரருக்கு 2010-ம் ஆண்டு ஏற்கனவே ஒரு வருடத்துக்கான சம்பள நிறுத்தம் செய்யும் தண்டனை பெற்றுள்ளார். இதனை எதிர்த்து மனுதாரர் ஏ.டி.ஜி.பி.யிடம் தாக்கல் ஆன மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது உறுதியாகிறது. இதுதொடர்பாக மனுதாரர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதன்பேரில் தான் அவருக்கான பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று வாதாடினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் மீதான தனிப்பட்ட பிரச்சினையின் காரணமாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அலுவல் பணி சார்ந்தது அல்ல. இதை காரணமாக காட்டி பதவி உயர்வை தள்ளி வைக்க இயலாது” என்று வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது அல்லது தண்டனை பெற்றது போன்ற நடவடிக்கைகள் பதவி உயர்வு வழங்க தடைக்கற்கள் என்று தான் கோர்ட்டு கருதுகிறது. இந்த வழக்கிலும் மனுதாரருக்கு துறை ரீதியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது, குற்றவியல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

காவல்துறையில் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கு சம்பந்தப்பட்டவரின் பணிப்பதிவேடுகள் மற்றும் நடத்தையை ஆய்வு செய்வது முக்கியமானது.

தண்டனை பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு பதவி உயர்வு வழங்க பரிசீலிக்க முடியாது. நேர்மையுடன் பணியாற்றுபவர்களை மட்டுமே பதவி உயர்வுக்கு பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக இந்த நடைமுறையை சீருடை பணிகளில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரர் மீதான குற்ற வழக்கு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தொடரப்பட்டது என கூறப்பட்டுள்ளது. இதனைப் பொறுத்தவரை எந்த பொது ஊழியராக இருப்பினும் குற்றவியல் வழக்கில் விதிவிலக்கு அளிக்க இயலாது. அரசு ஊழியர்கள் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.

அரசு அலுவலகங்களிலும், வெளியிடங்களிலும் அவர்களின் நடத்தை கண்ணியமானவராக இருக்க வேண்டும். பொது மக்களுக்கு மத்தியில் நன்னடத்தையை பின்பற்ற வேண்டும். காவல்துறையில் பரிசுப்பொருட்கள் எனும் பெயரில் பூங்கொத்துக்களை பரிமாறிக்கொள்வது அதிக அளவில் நடைபெறுகிறது. இதனை ஊடகங்களில் பார்க்க முடிகிறது.

பரிசுப்பொருட்கள், வரதட்சணை பெறுவது போன்றவை காவல்துறை நடத்தை விதி 4-க்கு எதிரானது. இது தடுக்கப்பட வேண்டும். எனவே சீருடை பணிக்கான ஒழுக்கத்தையும், மதிப்பையும் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் பணியாற்றுபவர்கள் பூங்கொத்துகள், பரிசுப்பொருட்கள், வரதட்சணை பெறுவதை தடுக்கவும், காவல்துறை நடத்தை விதிகளை கடுமையாக பின்பற்றுவது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. 6 வாரத்திற்குள் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story