காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் 5 கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருப்பு
சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 5 கிலோமீட்டர் தூர வரிசையில் காத்திருக்கின்றனர்.
காஞ்சீபுரம்,
அத்திவரதரை கடந்த 5 நாட்களாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ததாகத் தெரிவித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 6-வது நாளான இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் காலை 6 மணி அளவில் சாமி தரிசனம் செய்தனர்.
5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். விடுமுறை நாள் என்பதால் வெளியூர் வாகனங்களுடன் உள்ளூர் வாகனங்களும் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இன்று 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
500 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் நாளொன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே இணைய தளம் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதி ஆனி கருடசேவை மற்றும் 15-ஆம் தேதி ஆடி கருட சேவையை முன்னிட்டு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், மற்ற நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story