நீட் தேர்வு தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு -மத்திய அரசு தகவல்


நீட் தேர்வு தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு -மத்திய அரசு  தகவல்
x
தினத்தந்தி 6 July 2019 11:26 AM GMT (Updated: 6 July 2019 11:26 AM GMT)

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, இந்தியா முழுவதிலும் மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக தேசிய தகுதிக்காண் நுழைவுத்தேர்வு என்னும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2007–ம் ஆண்டு முதல் நுழைவுத்தேர்வு கிடையாது. பிளஸ்–2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே  இந்தப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நுழைவுத்தேர்வு என்றால், கிராமப்புறங்களில் உள்ள ஏழை–எளிய மாணவர்களுக்கு நிச்சயமாக இதுபோன்ற தேர்வு எழுதுவதற்கு பயிற்சியில்லாத நிலையில், மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்காது.

இந்த ஆண்டு உறுதியாக ‘நீட்’ தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டிய நிலையில், தமிழகத்தில் இதற்கு கிளம்பிய கடுமையான எதிர்ப்பின் காரணமாக, தமிழக சட்டசபையில் கடந்த ஜனவரி 31–ந்தேதி ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்காக ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, அந்தமசோதா கவர்னரின் ஒப்புதலையும் பெற்று, இப்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வு குறித்து சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு ஒன்றில் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கபட்டதாக மத்திய அரசு  தகவல் தெரிவித்து உள்ளது.

மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Next Story