பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய உதவி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்
சேலம் அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக் கிய அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்,
சேலம் அருகே உள்ள காக்காபாளையம் பகுதியில் வேம்படித்தாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்தார்.
அதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகவும், வேதியியல் ஆசிரியராகவும் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த பாலாஜி பணியாற்றி வந்தார். இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பமான அந்த மாணவி இதுகுறித்து சக தோழியிடம் கூறினார். மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரியவந்ததும் பரபரப்பாக பேசப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேற்று முன்தினம் கல்வி அதிகாரிகள் அங்கு சென்றனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். உதவி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே மாணவியை கர்ப்பமாக்கியதாக கூறப்படும் உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார்.
மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக போலீஸ் தரப்பில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்திக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து உதவி தலைமை ஆசிரியர் பாலாஜியை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டார். மேலும் துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story