மயிலாடுதுறையில் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் அவதி


மயிலாடுதுறையில் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் அவதி
x
தினத்தந்தி 8 July 2019 3:45 AM IST (Updated: 8 July 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை-கோயம்புத்தூர் இடையே ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கோயம்புத்தூரில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்கு மதியம் 1.40 மணிக்கு வந்து சேரும்.

நேற்று காலை 7.10 மணிக்கு கோயம்புத்தூரில் புறப்பட்ட ஜனசதாப்தி ரெயில் மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. 2.10 மணி அளவில் மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்கு அருகே வந்ததும் ரெயில் என்ஜின் டிரைவர் அஜய்குமார், உதவி டிரைவர் பாண்டியராஜ் ஆகியோர் ரெயிலின் வேகத்தை குறைத்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ரெயில் என்ஜின் தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம் புரண்டது. ஆனாலும் பதற்றம் அடையாத என்ஜின் டிரைவர்கள் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தினர். இதனால் என்ஜின் மட்டுமே தடம் புரண்டு நின்றது. மற்ற பெட்டிகள் எந்தவித ஆபத்தும் இல்லாமல் தண்டவாளத்தில் இருந்தன. இதனால் பயணிகள் தப்பினர்.

முன்னதாக என்ஜின் தடம் புரண்டபோது பயங்கர சத்தம் கேட்டது. இதன் காரணமாக அச்சத்தில் பயணிகள் கூச்சல் போட்டனர். ரெயில் நின்றபிறகே அவர்கள் நிம்மதி அடைந்தனர். ரெயில் தடம் புரண்டது பற்றி ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரெயில் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் முன்பாகவே ரெயில் தடம் புரண்டு நின்றதால் பயணிகள் அனைவரும் தண்டவாளம் வழியாக மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

இதன் பின்னர் மயிலாடு துறையில் இருந்து கோயம்புத்தூருக்கு மதியம் 2.50 மணிக்கு ஜனசதாப்தி ரெயில் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. அதில் செல்ல முன்பதிவு செய்து, மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் சிரமப்பட்டனர். அவர்கள் கோயம்புத்தூர் செல்வதற்கு ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் அரசு பஸ்களில் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதே நேரத்தில் திருச்சியில் இருந்து மாற்று என்ஜின் குத்தாலம் ரெயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த என்ஜின் தடம் புரண்ட ரெயிலுடன் இணைக்கப்பட்டு, குத்தாலத்தில் இருந்து மாலை 4.50 மணிக்கு கோயம்புத்தூருக்கு ஜனசதாப்தி ரெயில் புறப்பட்டு சென்றது. மேலும் தடம் புரண்ட என்ஜினை, கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜனசதாப்தி ரெயில் தடம் புரண்டதால் மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் ராமேசுவரம்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நேற்று தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

இதில் புதுச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கும்பகோணம் வழியாக தஞ்சைக்கு இயக்கப்படாமல், திருவாரூர் வழியாக தஞ்சைக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

அந்த ரெயிலில் கும்பகோணம் செல்ல இருந்த பயணிகள் மயிலாடுதுறையில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் பஸ் மூலமாக கும்பகோணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

Next Story