நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல்; மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்ய ஸ்டாலினிடம் நானே கூறினேன்: வைகோ பேட்டி


நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல்; மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்ய ஸ்டாலினிடம் நானே கூறினேன்:  வைகோ பேட்டி
x
தினத்தந்தி 8 July 2019 12:39 PM IST (Updated: 8 July 2019 12:39 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்யும்படி ஸ்டாலினிடம் நானே கேட்டு கொண்டேன் என வைகோ பேட்டியளித்து உள்ளார்.

திண்டுக்கல்,

தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் தலா 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். இந்த 2 கட்சிகளும், தங்களது கூட்டணியில் உள்ள கட்சிக்கு தலா ஓர் இடத்தை வழங்கியுள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் தலா 2 வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

அ.தி.மு.க. சார்பில் கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் முகமது ஜானும், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க. சார்பில் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகமும், வக்கீல் வில்சனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தி.மு.க. வேட்பாளர்களும் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரான வைகோவும் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களும் மற்றும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசும் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாளான இன்று மனுதாக்கல் செய்கிறார்கள்.

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைகோ மனுத்தாக்கல் செய்துள்ள அதேநேரத்தில் வைகோவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.  இதனால் மாநிலங்களவைக்கு 5 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியான நிலையில், வைகோ மனு ஏற்கப்படுமா? என்பது நாளை வேட்புமனு பரிசீலனையின் போது தெரியவரும்.

இதனிடையே மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தி.மு.க.வின் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்தார்.  2014ஆம் ஆண்டு அரக்கோணம் தொகுதியில் தி.மு.க. சார்பில் மக்களவைக்கு போட்டியிட்டவர் இளங்கோ.  வைகோ மனு நாளை நிராகரிக்கப்பட்டால் தி.மு.க. சார்பில் என்.ஆர். இளங்கோ போட்டியிட வாய்ப்பு உள்ளது.

அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க. நடவடிக்கை என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

இந்த நிலையில், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியில், நான் மாநிலங்களவைக்கு செல்ல வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்.  நான் எம்.பி.யாகவே மு.க. ஸ்டாலின் விரும்பினார்.  அப்படி போட்டியிட்டால் மட்டுமே ஒரு இடம் வழங்க முடியும் என கூறி கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது.  அதற்கு மு.க. ஸ்டாலின் ஒப்புதல் வழங்கினார்.  இது எழுதப்படாத ஒப்பந்தம் என கூறியுள்ளார்.

இதேபோன்று, மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்யும்படி ஸ்டாலினை நானே கேட்டு கொண்டேன்.  2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால்தான் தேர்தலில் போட்டியிட முடியாது.  அதனால் எனது வேட்பு மனு ஏற்று கொள்ளப்படும் என நம்புகிறேன்.  எனது மனுவை ஏற்று கொண்டு விட்டால் என்.ஆர். இளங்கோ தனது மனுவை வாபஸ் பெற்று விடுவார் என வைகோ கூறியுள்ளார்.

Next Story