ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாணவர்கள் விண்ணப்பித்தால் தகுதி இழந்து விடுவார்கள்; அமைச்சர் விஜயபாஸ்கர்
ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாணவர்கள் விண்ணப்பித்தால் தகுதி இழந்து விடுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ கல்வி சேர்க்கையில் இந்த வருடம் கூடுதலாக 350 இடங்கள் பெறப்பட்டுள்ளன என கூறினார்.
இதனிடையே, வெளிமாநிலங்களை சேர்ந்த 218 மாணவர்கள் தமிழக மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், சான்றிதழ்கள் சரிபார்த்த பின்னரே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், பிற மாநில மாணவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது தமிழகத்தில் 3,968 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் 852 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. மத்திய அரசின் ஒதுக்கீடாக 350 இடங்கள் இருக்கும். நீட் பதிவு எண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதால், மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் விண்ணப்பித்தால் தகுதி இழந்து விடுவார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story