ஜி.எஸ்.டி. வரியால் தமிழக அரசுக்கு கிடைத்த வருமானம் என்ன? தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு, ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்


ஜி.எஸ்.டி. வரியால் தமிழக அரசுக்கு கிடைத்த வருமானம் என்ன? தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு, ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
x
தினத்தந்தி 10 July 2019 3:00 AM IST (Updated: 10 July 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

‘ஜி.எஸ்.டி. வரியால் தமிழக அரசுக்கு கிடைத்த வருமானம் என்ன?’ என்பது தொடர்பான தி.மு.க. எம்.எல்.ஏ.வின் கேள்விக்கு, ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று வணிக வரித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. சேகரன் ஜி.எஸ்.டி. வரி குறித்த சில கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைப்படுத்தப்பட்டது. முந்தைய நிதி ஆண்டில் பெறப்பட்ட வரி வருவாயை காட்டிலும் 14 சதவீதம் வருவாய் வளர்ச்சியுடன், மாநில அரசின் வருவாயை காப்பதற்காக மத்திய அரசு இழப்பீட்டு தொகையை வழங்கி வருகிறது.

அதன்படி மத்திய அரசிடம் இருந்து 2017-18-ம் ஆண்டில் இழப்பீடாக ரூ.632 கோடியும், 2018-19-ம் ஆண்டில் ரூ.4 ஆயிரத்து 824 கோடியும் தமிழக அரசு பெற்றுள்ளது. மேலும் 2017-18-ம் ஆண்டுக்கான இழப்பீட்டு நிலுவைத்தொகையாக ரூ.386 கோடியும், 2018-19-ம் ஆண்டில் ரூ.553 கோடியும் நாம் பெற வேண்டியுள்ளது.

2017-18-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரியாக ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 688 கோடி மத்திய அரசால் பெறப்பட்டது. இத்தொகை மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையே 50:50 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அதன்படி 2017-18-ம் ஆண்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய மொத்தத்தொகை ரூ.88 ஆயிரத்து 344 கோடி ஆகும்.

இதில் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு 2017-18-ம் ஆண்டில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய மொத்தத்தொகை ரூ.6 ஆயிரத்து 582 கோடி ஆகும். இதில் மத்திய அரசிடம் இருந்து 2017-18-ம் ஆண்டில் ரூ.1,304 கோடி மட்டுமே பெறப்பட்டது. மீதமுள்ள ரூ.4 ஆயிரத்து 458 கோடி 2017-18-ம் ஆண்டின் நிலுவைத்தொகையாக பெற வேண்டியது உள்ளது.

நடப்பாண்டில் அதாவது 2018-19-ம் ஆண்டில் மத்திய அரசால் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரியாக பெறப்படும் தொகை, அவ்வப்போது மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. தற்போது வரை ரூ.4 ஆயிரத்து 842.82 கோடி தற்காலிக, இடைக்கால தொகையாகவும், ரூ.12 ஆயிரத்து 425.9 கோடி வழக்கமான தீர்வுத்தொகையாகவும் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story