திருமுருகன்காந்தியை இயக்குவது யார் என தீவிரமாக விசாரிக்க வேண்டும் போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


திருமுருகன்காந்தியை இயக்குவது யார் என தீவிரமாக விசாரிக்க வேண்டும் போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 July 2019 9:14 PM GMT (Updated: 9 July 2019 9:14 PM GMT)

திருமுருகன்காந்தி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்த ஐகோர்ட்டு அவரை பின்னால் இருந்து இயக்குவது யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. இவர் பல்வேறு போராட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை எல்லாம் ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திருமுருகன்காந்தி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், ‘மனுதாரர் எப்போதும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் தெரிவிக்கும் கருத்துகளால், மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் நல்ல திட்டங்கள் மீது பொதுமக்களுக்கு தவறான எண்ணங்கள் உருவாகுகின்றன. எனவே, இவர் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது‘ என்று வாதிட்டார்.

மனுதாரர் சார்பில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களை பார்க்கும்போது, முரண்பட்ட கருத்துகளை மனுதாரர் தொடர்ந்து பேசி வருவது தெரிகிறது. அவர் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவரது கருத்தின்படி, தமிழ்நாடு இந்தியாவுக்கு சொந்தம் இல்லை. பல அமைப்புகள் இந்த மாநிலத்தை அழிக்க முயற்சிக்கிறது என்பதாக உள்ளது. அதுமட்டுமல்ல, அவர் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டையும் விமர்சித்துள்ளார்.

ஜனநாயக சமுதாயத்தில், பேச்சுரிமை என்பது ஒரு அடித்தளமான உரிமை தான். ஒருவருக்கு ஒருவர், தன் கருத்துகளை, தகவல்களை பரிமாறிக்கொள்வது, மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பது, விவாதம் செய்வது, சமூக, பொருளாதார, அரசியல் கருத்துகளை வெளியிடுவது என்பது எல்லாம் சமுதாயத்தின் சுதந்திரம் தான். அதற்காக எல்லை மீறி பேசுவதை ஏற்க முடியாது.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் பேச்சுரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், விரும்பத்தகாத, அருவருப்பான கருத்துகளை தெரிவிக்க அரசியல் அமைப்புச்சட்டம் யாருக்கும் உரிமை வழங்கவில்லை என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

எனவே, திருமுருகன்காந்தியின் மீதான வழக்கை ரத்து செய்யமுடியாது. அவரது பேச்சுகள், கருத்துகளை பார்க்கும்போது, அவர் மீது இந்த வழக்குகளை எல்லாம் பதிவு செய்வதற்கு போதிய முகாந்திரம் உள்ளது என்று முடிவு செய்கிறேன். இயக்குவது யார்?

இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன். அதேநேரம், திருமுருகன்காந்தியின் பின்புலம் குறித்தும், அவருக்கு பின்னால் இருந்து யார் இயக்குகிறார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story