மாநில செய்திகள்

பெண்களுக்கு தலா 10 ஆடுகள்: ரூ.235 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + "||" + 10 sheep per female Fishing ports at Rs 235 crore Edappadi Palanisamy Announced in Assembly

பெண்களுக்கு தலா 10 ஆடுகள்: ரூ.235 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பெண்களுக்கு தலா 10 ஆடுகள்: ரூ.235 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
விழுப்புரம், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ரூ.235 கோடியில் புதிதாக மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும், 90 சதவீத மானியத்தில் பெண்களுக்கு தலா 10 ஆடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியத்தையும், மன வளத்தையும் மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் அ.தி.மு.க. அரசால், நடப்பு ஆண்டில், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்” என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.


இத்திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் “அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு” அமைக்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும், கபடி, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும் 3 விளையாட்டுகளுக்கு களம் அமைக்கும் பணிகள், ஊரகப் பகுதிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும், பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் பொது நிதியில் இருந்தும் மேற்கொள்ளப்படும்.

இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளித்து, ஊராட்சி ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் பரிசுகள் வழங்கப்படும். ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில், ஆண்டு முழுவதும் விளையாட்டு சாதனங்கள் வழங்கவும், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைக்கவும், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கவும் ரூ.64 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் அவற்றின் தொடர் செலவினத்திற்காக மாநில அரசின் நிதியில் இருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மூலம் மேற்கொள்ளப்படும்.

அனைத்து முக்கியமான சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் பதக்கம் வெல்பவர்களுக்கும் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கும் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும். சென்னை நேரு பூங்கா அருகில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பழைய தலைமை அலுவலகக் கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 12 ஆசிரியர் குடியிருப்புகள் ரூ.3.5 கோடி செலவில் கட்டப்படும்.

மாநில தகவல் ஆணையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்பட வேண்டிய அவசியத்தை கருதி, இதற்கென சென்னை, சைதாப்பேட்டையில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன.

மாநில தகவல் ஆணையத்திற்கு, விசாரணை அறைகள், ஆணையர்களுக்கான அறைகள், அலுவலக அறைகள், மனுதாரர்களுக்கான காத்திருக்கும் அறைகள், நூலகம், கூட்ட அரங்கு, வாகன நிறுத்துமிடம், மனுதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திட தரைத்தளம் மற்றும் 5 தளங்களை கொண்ட சொந்த கட்டிடம் ஒன்று ரூ.27.79 கோடி மதிப்பீட்டில் கட்டித்தரப்படும்.

30-8-2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில், விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம், காஞ்சீபுரம் மாவட்டம் ஆலம்பரைக்குப்பம் கழிவேலியில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று என்னால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையின்படி, விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம், காஞ்சீபுரம் மாவட்டம் ஆலம்பரைக்குப்பம் கழிவேலியில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் மீன்பிடித் துறைமுகங்கள் ரூ.235 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்த மீன்பிடி துறைமுகங்களில், 250 இயந்திர படகுகளும், 1,100 வெளிப் பொருத்தும் மோட்டார் கண்ணாடி நாரிழை படகுகளும் நிறுத்த இயலும். இதனால் சென்னை மற்றும் கடலூரில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நெருக்கடி குறைக்கப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான ஆற்காட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, கொடியக்காடு மற்றும் மணியன்தீவு ஆகிய பகுதியில் மீன்பிடித் துறைமுகம் இல்லாத காரணத்தினால், ஆற்காட்டுத்துறை கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வுசெய்து உரிய திட்டம் தயாரிக்கப்படும் என 20-9-2017 அன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் என்னால் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், 100 விசைப் படகுகள் மற்றும் 500 கண்ணாடி நாரிழைப் படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக ரூ.150 கோடி செலவில் ஒரு புதிய மீன்பிடி துறைமுகம் ஆற்காட்டுத்துறையில் அமைக்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகூர் மீன்பிடி இறங்குதளம் அமைந்துள்ள வெட்டார் ஆற்றின் தெற்குப் பகுதியில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. முகத்துவாரப் பகுதியில் அதிகப்படியான வண்டல் மண் படிந்ததன் காரணமாக படகுப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

வண்டல் மண் படிவதைத் தடுத்திடவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், படகுகளை சுலபமாக இயக்குவதற்கும், வெட்டார் ஆற்றின் வடக்குப் பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். இதனால் 200-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபடும் விசைப் படகுகளும் நாகூர் மீன்பிடி இறங்குதளத்தை பயன்படுத்த முடியும். இத்திட்டத்தால் மீனவர்கள் ஆண்டு முழுவதும் மீன்பிடிக்கச் செல்ல முடியும்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள பெரியதாழையில், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மீன்பிடி உடமைகளை கடலரிப்பில் இருந்து பாதுகாக்கவும், வடக்கு கடற்கரையில் ஏற்படும் கடலரிப்பினை குறைத்திடும் வகையில், 2 சிறிய நேர்கல் சுவர்களை அமைத்து கடற்கரையினை பாதுகாத்திட அலை தடுப்புச்சுவர் கருங்கற்களாலும் மற்றும் கான்கிரீட் கற்களாலும் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

சென்னை மீன்பிடி துறை முகத்தில் 200 மெட்ரிக் டன் அளவில் மீன்கள் கையாளப் படுகிறது. சுமார் 30 ஆயிரம் பேர் தினமும் இத்துறைமுகத்தில் மீன்பிடி மற்றும் மீன் விற்பனைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இம்மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ரூ.10 கோடி செலவில் துறைமுகத்தின் தென்பகுதியில், சிறிய படகு அணையும் தளமும், பெரிய படகு அணையும் தளமும் மற்றும் மீன் விற்பனை கூடமும் அமைக்கப்பட உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஏழ்மை நிலையில் உள்ள பெண் பயனாளிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தை கடந்த 2011-2012-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் நடப்பாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஜெயலலிதாவின் சீரிய சிந்தனையில் உதித்த இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து, தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் உள்ள பெண் பயனாளிகளுக்கு 90 சதவீதம் மானியத்தில் பயனாளிக்கு தலா 10 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் மற்றும் ஒரு வெள்ளாடு அல்லது செம்மறி ஆட்டுக்கிடா வீதம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில், ஆடுகளை கொள்முதல் செய்தல், போக்குவரத்து செலவு, ஆடுகளுக்கு காப்பீடு செய்தல் ஆகியவற்றுடன், உபகரணங்கள், மருந்துகள் மற்றும் ஊட்டச் சத்துகளும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம், 6 ஆண்டுகளுக்கு பிறகு நன்கு வளர்ந்த செம்மறி மற்றும் வெள்ளாடுகளை விற்பதன் மூலம் ஒரு பயனாளி, முறையே ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1.80 லட்சம் முதல் ரூ.2.70 லட்சம் வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு ஊராட்சிக்கு 45 பயனாளிகள் வீதம் 81 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3,645 பயனாளிகள் நேரடியாக பயன்அடைவார்கள். இத்திட்டம், நடப்பாண்டில் ரூ.24.06 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

பொருளாதார நலிவில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க கால்நடைகளுக்கான பிரத்யேக காப்பீட்டுத் திட்டத்தை பயனாளிகளின் பங்களிப்பு மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. நடப்பாண்டில் அனைத்து மாவட்டங்களிலும், மொத்தம் 2.50 லட்சம் கால்நடை அலகுகள் ரூ.22.46 கோடி நிதி ஒதுக்கீட்டில் காப்பீடு செய்யப்படும். பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு 70 சதவீத மானியத்துடனும், மற்ற பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்துடனும், மலைப் பகுதியில் உள்ள பட்டியல் வகுப்பு, பழங்குடியினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு 80 சதவீத மானியத்துடனும், இதர பயனாளிகளுக்கு 60 சதவீத மானியத்துடனும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் தற்போது 28 கால்நடை நோய் புலனாய்வு ஆய்வகங்களும், 2 கோழியின நோய் ஆராய்ச்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. உலகத் தரத்துடன் சிறந்த ஆய்வக முறைகளுடன் கூடிய ஒரு புதிய “மத்திய கால்நடை நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகம்” காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் ரூ.10 கோடி ஒதுக்கீட்டில் தோற்றுவிக்கப்படும். இந்த ஆய்வகத்தில், மத்திய நோய் ஆய்வுக் கூடம், ஏற்றுமதிக்கான கால்நடை உற்பத்திப் பொருட்கள் ஆய்வுக்கூடம், கால்நடை மருத்துவர்களுக்கான தங்கும் வசதியுடன் கூடிய தொழில்நுட்ப பயிற்சிக்கூடம் முதலிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

சிறந்த கால்நடை மருத்துவ சேவையை வழங்குவதற்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய உட்கட்டமைப்பு அவசியமாகும். அந்த வகையில், புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 100 கால்நடை மருந்தகங்களுக்கு அறைகலன்களுடன் கூடிய புதிய கட்டிடங்கள் தலா ரூ.37 லட்சம் மதிப்பீட்டில், மொத்தம் ரூ.37 கோடி செலவில் நடப்பாண்டில் கட்டித் தரப்படும்.

பால் உற்பத்தி பெருக, காளை கன்றுகளைவிட கிடேரி கன்றுகள் பிறப்பதையே விவசாயிகள் அதிகம் விரும்புகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு, உதகமண்டலம் மாவட்ட கால்நடைப் பண்ணையில் செயல்பட்டு வரும் விந்து உற்பத்தி நிலையத்தில், விந்தணுவில் பாலினம் பிரிக்கும் ஆய்வகம் ரூ.47.50 கோடி செலவில் நடப்பாண்டில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு
பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று தசரா விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
2. பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை என்று பொய்யான புகார் கொடுத்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை என்று பொய்யான புகார் கொடுத்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. மகளிரணியினர், வக்கீல்கள் நலச்சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...