“அரசாங்கம் எல்லாவற்றுக்கும் லாபநோக்கம் பார்க்கக் கூடாது; போக்குவரத்து துறையில் ஜென்மத்திற்கும் லாபம் வராது!” - துரைமுருகன்
“அரசாங்கம் எல்லாவற்றுக்கும் லாபநோக்கம் பார்க்கக் கூடாது; போக்குவரத்து துறையில் ஜென்மத்திற்கும் லாபம் வராது!” என துரைமுருகன் கூறினார்.
சென்னை,
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் கோ.வி.செழியன், போக்குவரத்துத்துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மினி பஸ் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என கோரினார்.
அதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், போக்குவரத்து துறை கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள சூழலில் மினி பஸ் தேவையில்லாத ஒன்று என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கிராமங்களில் உள்ள குறுகலான சாலைகளில் பெரிய பேருந்துகள் செல்ல முடியாத காரணத்தினாலேயே மினி பஸ் சேவை துவங்கப்பட்டது எனக் கூறினார்.
மேலும் எந்த ஜென்மத்திலும் போக்குவரத்து துறை லாபத்தில் இயங்காது எனக் கூறிய துரைமுருகன், லாப நோக்கம் பார்க்காமல் சேவை மனப்பான்மையோடு செயலாற்ற வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், போக்குவரத்து கழகம் லாப நோக்கோடு அல்ல, சேவை நோக்குடன் தான் இயங்கி வருகிறது. பேருந்துகள் அதிகம் இயங்கும் வழித்தடங்களில் மட்டுமே மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் இயங்காத வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க யாரும் முன்வராத காரணத்தால் 1500 பர்மிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
Related Tags :
Next Story