இந்தியாவுக்கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபரை திருப்பி அனுப்ப நடவடிக்கை


இந்தியாவுக்கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபரை திருப்பி  அனுப்ப நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2019 4:45 AM IST (Updated: 3 Aug 2019 4:24 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபரை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி,

கடந்த 27-ந்தேதி மாலத்தீவில் இருந்து இழுவை கப்பல் தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்தது. இதில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் ரகசியமாக ஏறி வந்தார். அவர் வரும் விவரம் பற்றி தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த இழுவை கப்பல் தூத்துக்குடி கடல் பகுதியில் நேற்று முன்தினம் வந்தபோது, கடலோர காவல்படையினர் அந்த இழுவை கப்பலை வழிமறித்தனர். அதில் இருந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப்யிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இவர் முன்னாள் அதிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தார். கடந்த மே மாதம் அவருக்கு கோர்ட்டு ஏற்கனவே விதித்த தண்டனையை ரத்து செய்து விட்டு மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் அவர் தூத்துக்குடியில் சிக்கி உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். அதில் 10 ஆயிரம் டாலர் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று அவரது உடைகளும் இருந்தன. அவர் சாட்டிலைட் செல்போன் வைத்து இருந்தார். ஆனால், அதனை இந்திய எல்லைக்குள் பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அந்த இழுவை கப்பலை அங்கிருந்து செல்லாமல் நிறுத்தி வைக்குமாறும், கப்பலில் இருந்து அகமது ஆதீப்பை கீழே இறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் அகமது ஆதீப் தொடர்ந்து இழுவை கப்பலிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

மேலும், பல்வேறு உளவுப்பிரிவு போலீசாரும் பழைய துறைமுகத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். நேற்று 2-வது நாளாக ஐ.பி, கியூ பிரிவு, ரா உள்ளிட்ட உளவுத்துறை அதிகாரிகள் ஒரு இழுவை கப்பல் மூலம் அகமது ஆதீப் உள்ள கப்பலுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து சிறப்பு அதிகாரி சாலினி அக்னிகோத்ரி தூத்துக்குடிக்கு வருகிறார். அவர் அகமது ஆதீப்பிடம் விசாரணை நடத்த இருப்பதாக தெரிகிறது. அதேபோன்று மாலத்தீவு அரசு, அகமது ஆதீப்பை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 6 அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்து உள்ளனர். அவர்கள் தலைமை குடியுரிமை அலுவலகத்துக்கு செல்கின்றனர். இன்று (சனிக்கிழமை) முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் திருப்பி அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story