செல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டே அரசு பஸ்சை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்டு


செல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டே அரசு பஸ்சை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்டு
x
தினத்தந்தி 3 Aug 2019 1:51 PM IST (Updated: 3 Aug 2019 1:51 PM IST)
t-max-icont-min-icon

செல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டே அரசு பஸ்சை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் மூக்கையா. இவர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில் மூக்கையா, செல்போனில் வாட்ஸ்அப்பை பார்த்து கொண்டே பஸ்சை ஓட்டினார். அதனை பஸ்சில் பயணித்த பயணி ஒருவர், செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

அதனை பார்த்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மூக்கையா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து மூக்கையாவை சஸ்பெண்டு செய்து புதுக்கோட்டை மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாளர் ஆறுமுகம் இன்று உத்தரவிட்டார்.

வாகனங்கள் ஓட்டும் போது செல்போனில் பேசக்கூடாது என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் வாகன ஓட்டிகள் பலர் விதிமுறைகளை மீறி செல்போனில் பேசியவாறு வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இதில் சிலர் விபத்திலும் சிக்குகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக அரசு பஸ் டிரைவர்கள், செல்போனில் பேசிக்கொண்டு பஸ்சை இயக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டு பஸ்சை இயக்கிய ஓட்டுநர்  மூக்கையா அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இது போன்ற செயலில் ஈடுபடும் ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story